9 September 2006

நினைவுகள் III

அப்போது வயது சுமார் நான்கு இருக்கும். அன்றய தினம் எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் அக்டோபர் 15, 1988. அதாங்க எனக்குப் பிறந்தநாள். ஐந்தாவது வயது தொடங்குகின்ற நாள். காலையில் வழமை போல அம்மா, அப்பாவின் வாழ்த்துக்கள் மற்றும் உறவினரின் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்து கொண்டது. அத்துடன் அன்று பாலர் பாடசாலைக்கும் கொஞ்சம் சாக்லேட் வாங்கித்தருவதாக அப்பாவேறு கூறி இருந்தார். எனக்கோ ஒரே குஷி.........

வாழ்க்கையில் முதல் தடவையாக வீட்டிற்கு வெளியே என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றேன். அதனால் கொஞ்சம் பரபரப்பாகவெ இருந்தேன். நான் படித்த பாலர் பாடசாலை ஆசிரியையின் பெயர் பாலா ரீச்சர். இங்கு வழக்கம் என்ன வென்றால் காலையில் சென்றவுடன் அன்றய தினம் பிறந்ததினம் உள்ள மாணவர்கள் சாக்லட் பாக்கை அவரிடம் ஒப்படைப்பர். காலையில் இறைவணக்கம் முடிந்ததும் அவரின் தலமையில் அந்த மாணவனின் சாக்லெட் வினையோகம் நடக்கும்.

அப்பா காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் எனக்கு ஒரு பை சாக்லெட் வாங்கி வைத்து இருந்தார். அதை எடுத்து எனது நர்சரி பாக்கினுள் வைத்துக்கொண்டேன். காலை 7 மணி ஆகிவிட்டு இருந்தது. வழமைபோல அம்மா என்னை அவசரம் அவசரமாக நெர்சரியில கொண்டு சென்று விட்டா. நர்சரி வாசலுக்கு வந்ததும் எனது மனதில் ஒரு விபரீத ஆசை முளைக்க தொடங்கியது.

இவ்வளவு சாக்லெட்டையும் நானே சாப்பிட்டால் எப்பிடி இருக்கும். எதுக்கு இந்த பொடிங்களுக்கும் பெட்டைகளுக்கும் ஏன் என்ற அப்பா வேண்டித்தந்த சாக்லெட்ட குடுக்கோணும். என்ன சரியான கேள்விதானே???

நான் முடிவெடுத்து விட்டேன், அதாவது யாருக்கும் சாக்லெட் குடுப்பதில்லை எல்லாத்தையும் நானே சுடுவதென்று. வகுப்பில் நான் வழமைபோல சென்று உட்கார்ந்து கொண்டேன். அன்றய தினம் எனது வேறு ஒரு வகுப்புத் தோழனுக்கும் பிறந்த நாள். ஆகவே அவனின் ஒரு சாக்லெட்டையும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தது.

எல்லாம் முடிந்து வீடு வந்து விட்டேன். எனது நர்சரி பையில் இருந்து ஒவ்வொன்றாக சாக்லெட்டுகளை சாப்பிடத் தொடங்கினேன். நான் தொடர்ந்து சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அம்மா கவனித்து விட்டார்.

“தம்பி! என்ன இது சொக்லெட் எல்லாம் சாப்பிடுறாய்?”

“அது அம்மா... வந்து நர்சரியில குடுத்தது போக மிச்சம் அது” மழலை மொழியில் பொய் சொன்னேன்.

அம்மாவும் நம்பிவிட்டா. பின்பு அன்று இரவு எல்லாரும் இரவுச் சாப்பாடு சாப்பிடும் போதும் நான் கையில் சாக்லெட்டுகளுடன் இருக்கின்றேன். இப்போது அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது.

“மயூரேசன்! பொய் சொல்ல வேண்டாம். இண்டைக்கு சொக்லேட் ஒண்டையும் வகுப்பில குடுக்கேலத் தானே?” உறுக்கலாக அம்மா கேட்டார்.

இதை கொஞ்சமும் எதர்பார்க்காத நான் பயத்திலே அழத் தொடங்கிவிட்டேன். பிரைச்சனையை பெரிதாக்க விரும்பாத அம்மா அந்த பிரைச்சனையை அத்துடன் முடித்துக்கொண்டார். அத்தனை சாக்லெட்டும் எனக்கே சொந்தமானது.

மறு நாள் இன்னுமொரு சாக்லெட் பாக் வேண்டப்பட்டது. இந்தத் தடவை என்னிடம் பாக் தரப்பட வில்லை. அம்மாவே அதை நர்சரி ஆசிரியையிடம் கொடுத்தார். ஆகவே அம்மா புண்ணியத்தில் எனக்கு நர்சரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தேறியது. இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும் விடையம் இது.

இதைப்போல நான் சங்கீதம் படித்தது கூட ஒரு சுவையான கதை. நான் சங்கீதம் படித்த ஆசிரியையின் பெயர் நற்குணம். நாங்களெல்லாம் செல்லமாக நரிக்குணம் என்று கூப்பிடுவம். இவரது அடித்தொல்லையில் இருந்து தப்பாத மாணவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

சுமார் 4 வயதிலேயே எனது சித்தியின் ஆசையின் பேரில் என்னை சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டனர். இந்த சித்தி என்னை இருக்கேலாமல் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டு தன் பாட்டிற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார். இப்போ எனக்கு சங்கீதம் சொல்லித்தர வீட்டில் யாரும் இல்லை. மிகவும் கஷ்டமான காலம் அப்போதுதான் தொடங்கியது.

சங்கீத வகுப்பிலோ அடி வேண்டாத நாள் இல்லை. வீட்டில் அம்மாவிடம் அடி விழுந்தது என்று சொல்லவும் விருப்பமில்லை. அதாவது மானப் பிரைச்சனை. என்னோட அம்மா நான் அடி வேண்டின கதையை எல்லாருக்கும் ஏதோ நான் சாதனை செய்தது போல சொல்லுவா. எனக்கு அந்த நடத்தை கொஞ்சம் கூடப் பிடிக்கிறதில்லை. அதனால சங்கீத வகுப்பில் நடக்கிறத எல்லாம் அம்மாட்ட சொல்லுறதே கிடையாது.

பிஞ்சு மனது துடியாய் துடித்தது கடுமையான மன அழுத்தம்!!!!!!!.

அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன் அதாவது ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வகுப்பு செல்வது போல புறப்படுவது. பின்பு திருமலை நகரை வலம்வருவது. வகுப்பு முடியும் நேரத்திற்கு மீண்டு வீடு செல்வது.

மாலை மூன்று மணி அளவில் வீட்டில் இருந்து புறப்படுவது பின்னர் 5 மணி அளவல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோறணையில் வீடு வருவது. இப்படியே காலம் போனது. எப்பிடியும் ஒரு ஆறு மாசம் என்னுடைய திருவிளையாடல் தொடர்ந்தது. என் கஷ்டகாலம் ஒரு நாள் வீதியில் என்னுடைய சங்கீத டீச்சரும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து விட்டனர். அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்கு அருகாமையில்தான் நான் சங்கீதம் கற்ற தட்சின காண சபா இருந்தது.

“என்ன உங்கட மகன் இப்ப சங்கீத கிளாசுக்கு வர்ரதில்ல ???”

“இல்லையே அவன் வாறவன். நேற்றுக் கூட வீட்டில இருந்து வெளிக்கிட்டவன் தானே !!” அம்மாவுக்கு தலைகால் புரியவில்லை பாவம்

“டீச்சர் உங்கட மகன் ஏதோ விளையாட்டு விடுறான். அவனை நாங்க கையும் மெய்யுமா பிடிப்பம்”.

“என்னால நம்ப ஏலாம இருக்குது இந்தப் பொடியன் இப்பிடி செய்யிறான் எண்டு!!” அம்மாவிற்கு எதுவுமே புரியவில்லை. மகன் இப்பிடி ஒரு பயங்கரவாதியாய் இருப்பான் என்று அவர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை அதுவும் இத்தனை சிறிய வயதில். பாவம் அவன் அந்த ரீச்சரிடம் அடிபட்டது இந்த அம்மாவுக்குத் தெரியாது தானே.

மறு நாள் வழமை போல வீட்டிலிருந்து புறப்பட்டேன். சோனகவாடி பள்ளிவாசல் அருகாமையில் இரண்டு பொடியங்கள் கையைக்காட்டி என்னை மறித்தாங்கள். நானும் வலு கலாதியா சைக்கிளை ஓரம் கட்டிக்கொண்டு. “என்ன அண்ணா?” என்று கேட்டேன்.

கிட்ட வந்து சடார் என என்னை மடக்கிக் கொண்டான். அப்பிடியே அலேக்கா என்ன சபாக்கு கொண்டு போயிட்டான் அங்க அம்மா சங்கீத ரீச்சர் எல்லாரும் எனக்கு தட்சிணை போடக் காத்திருந்தாங்கள்.

“ரீச்சர்! இவனுக்கு அடிக்கிறதப் பற்றி கவலப்படாதீங்கோ. நல்லா அடிபோடுங்கோ அம்மா வேறு உத்தரவாதம் கொடுத்துவிட்டுப் போனார்.

அன்றிலிருந்து இரண்டு மாதத்தினுள் சங்கீதம் முதலாம் தரப்பரீட்சை வர இருந்தது. ஆகவே எனக்கு இரவு பகலாக கடும் சங்கீத வகுப்பு நடைபெற்றது. கடைசியாக சங்கீதப் பரீட்சையும் முடிந்தது. ஆயினும் அது வரைகாலமும் நான் பெற்ற அடிகள் கணக்கில் அடங்கா. இறுதியில் இதற்கு மேல் என்னால் படிக்க முடியாது என்பதை அம்மாவிற்குப் புரியவைத்து நான் சங்கீத வகுப்பில் இருந்து நின்று விட்டேன். ஆனால் இன்று தொடர்ந்து படித்து இருக்கலாம் என்ற ஒரு நெருடல் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.

4 மறுமொழி:

said...

வெகு சிலருக்கே சங்கீதம் சொல்லிக்கொடுத்து வரும்.
மற்றபடி அது ஒரு தனி அலைவரிசை.

said...

//வெகு சிலருக்கே சங்கீதம் சொல்லிக்கொடுத்து வரும்.
மற்றபடி அது ஒரு தனி அலைவரிசை//
நீங்கள் சொல்வது சரி அன்பரே! எதிலும் மனம் ஒத்து செய்ய வேண்டும் இல்லாவி்ட்டால் லயிக்காது...

said...

mayuran nengaluma????

said...

அக்டோபர், அதாங்க, சாக்லேட், நர்சரி
ஏன் நீங்கள் பருத்தித்துறை-திருகோணமலை-களனி மொழிகளிலே கதை எழுத முயற்சிக்கக்கூடாது? இப்போதுதான் இலங்கை வட்டாரவழக்கிலே எழுதினாலும் அதுவும் எழுத்தென்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே? அம்மா சொல்கையிலே நெர்சரி, சொக்லேட்; நீங்கள் கதை சொல்கையிலே நர்சரி, சாக்லேட். get real kid & be yourself (இங்கிலீசில பிழையா எழுதினாலும், அதைத்தானே சனம் கேக்கும்).
சாரதா வீதி நற்குணம் மிஸ்ஸை ஏன் இங்கை இழுக்கிறீர் தம்பி? மற்றது, அது தட்சணகானசபா ராசா. ராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி கஷ்டப்பட்டு வைச்சிருக்கிறா? அம்மா எங்கை சென்சேவியரோ பெருந்தெருவிலோ படிப்பிச்சவ? தெரிஞ்ச ரீச்சரோ எண்டு யோசிக்கிறன்.