23 : Goal! The Dream Begins (2005) - திரைவிமர்சனம்
கோல் என்றால் இலக்கு என்று பொருள்படும். இந்தக் கதையும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையே ஆகும்.
மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு களவாக குடி பெயர்கின்றது சன்டியாகோவின் குடும்பம். சன்டியாகோவின் தாயார் சிறு வயதிலேயே வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறிவிட தந்தையின் வளர்ப்பிலே சன்டியாகோவும் அவன் தம்பியும் வளர்கின்றனர். இவர்களுக்கு ஒரு பேத்தியாரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மெச்சிக்கோவில் இருந்து வெளியேறி அமெரிக்காவினுள் நுழையும் தறுவாயில் அமெரிக்க எல்லைக் காவல் படையிடம் இருந்து மயிர் இழையில் இந்தக் குடும்பம் தப்புகின்றது. தப்பும் வேளையில் அந்தச் சிறுவனுக்கு கால்பந்தாட்டம் மீது இருக்கும் நாட்டத்தைக் காட்ட சிறு காட்சி ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அதாவது இவர்கள் எல்லையில் உள்ள வேலியைக் கடந்து அமேரிக்காவினுள் நுழையும் தறுவாயில் மெச்சிக்கோப் பக்கம் சிறுவனின் பந்து விழுந்து விட அதைவிட்டு விட்டு வர மனமில்லாமல் தடுமாறுகின்றான். இருந்தபோதும் தந்தையின் அதட்டலுக்குப் பயந்து பந்தை விட்டு வருகின்றான். அப்போது அவன் முகத்தில் தெரியும் ஏமாற்றம் பாருங்கள்.......
பத்து வருடங்களின் பின்பு லாஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் இந்தக் குடும்பம் தங்கிவிட்டபோதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருக்கின்றது. இதே வேளையில் அந்தச் சிறுவன் தற்போது இளைஞனாகி நிற்கின்றான். அவனுக்குள் ஆசைகள் இருக்கின்ற போதும் தந்தை அவனது ஆசைகளை நோக்கி கனவுகளை வளர்க்க விடுவதில்லை. அப்துல் கலாம் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற வாக்கியம் அவன் தந்தைக்குப் புரியவில்லை.
ஒரு ஏழைக் குடும்ப வாலிபன் தான் தன்னை மீறி கனவு காணக்கூடாது என்பதே அவரது வாதம். பல தடவை தந்தை மகனை இந்த விடயத்தில் கண்டிக்கின்றார்.
இதே வேளையில் இந்த இளைஞன் சன்டியாகோவின் கால்ப் பந்தாட்ட விளையாட்டுத் திறமையைப் பார்த்த இங்கிலாந்துக் காரர் ஒருவர் அவனுக்கு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அவரின் முயற்சகள் தோல்வி அடையவே சன்டியாகோவை இங்கிலாந்துக்கு வருமாறும் அப்படி வந்தால் தான் சந்தர்ப்பத்தை வாங்கித் தருவதாககும் கூறி விடை பெறுகின்றார்.
கனவுகளில் மீண்டும் மிதக்கும் இளைஞனுக்கு அவனது தந்தை கட்டுப்பாடு போடுகின்றார். இது வீண் கனவு என்றும் தன்னைப்போல தன் மகனும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து செல்வதற்காக சன்டியாகோ பணம் சேர்க்கத் தொடங்குகின்றான். ஆயினும் சேர்த்த பணம் எல்லாம் அவனது தந்தை ஒரு ட்ரக் வேண்டப் பயன்படுத்தி விடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் விரக்தியுடன் உலாவும் இந்த இளைஞன் அவனது பாட்டியின் உதவியுடன் தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து பயணம் ஆகின்றான்.
இங்கிலாந்தில் இளைஞன் தனது வெற்றிக்காக உழைப்பதையும் இறுதியில் ஒரு வெற்றிகரமான தொழில் ரீதியான கால்பந்தாட்ட விளையாட்டு வீரனாக மாறினானா என்பதுமே மிகுதிக் கதை.
இது வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இளைஞர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இந்தப்படம் உதவி செய்யலாம்.
இங்கிலாந்தில் அந்த இளைஞன் படும் துன்பம் இருக்கின்றதே பாருங்கள். அளவிட முடியாது. அவன் பிரகாசிக்க முடியாமல் திணறுவதையும் அவன் கற்பனைகள் கரைவதையும் பார்க்கும் போது எமக்கும் தான் கவலை ஏற்படுகின்றது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் அவன் முயற்சிகள் பயனளித்ததா என்பதை திருட்டு டீவிடீ வேண்டியாவது பாருங்கள்.
திரையில் நாயகன் நடிப்புடன் கொஞ்சம் திணறுவதைக் காண முடிகின்றது. ஆனால் கால் பந்துடன் சுழன்று சுழன்று கலக்குகின்றார். ஆயினும் மற்றய துணை நடிகர்களின் நடிப்பாற்றலால் நாம் இவரின் குறையைக் கண்டு கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இங்கிலாந்திற்கு இவரை அழைக்கும் முன்னய கால்பந்தாட்ட வீரர் மற்றும் சன்டீயாகோவின் காதலி போன்றோர் நடிப்பில் கலக்குகின்றனர்.
இத்திரைப்படம் ஆரம்பத்தில் இயக்குனர் மைக்கல் வின்டர் பொட்டம் என்பவருடனே ஆரம்பித்தது. ஆயினும் அவர் இதிலிருந்து விலகிக்கொண்டார். காரணம் இந்த திரைப்படத்தில் உண்மையான கால்பந்தாட்ட கழகங்களின் பெயர் பயன்படுவதால் பீஃபா (FIFA) தன் அனுமதியைப்பெற வேண்டும் என்று கூறிவிட்டது. கோபப்பட்ட மனுசன் விட்டுட்டுப்போய்விட்டார்.
இத்திரைப்படத்தின் மிகுதி 2 பாகங்கள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
பிகு : இந்த திரைப்படத்தில் பிரபல கால்பந்தாட்ட வீரர், முன்னய இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் பெக்காம் ஒரு காட்சியில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 மறுமொழி:
அருமையான விமர்சனம் மயூரன் எனது வாழ்த்துக்கள்...
நான் விரும்பிப்பார்த்த படங்களில் ஒன்று
//அருமையான விமர்சனம் மயூரன் எனது வாழ்த்துக்கள்...
நான் விரும்பிப்பார்த்த படங்களில் ஒன்று //
Thank Machi... ;)
Post a Comment