9 September 2006

நினைவுகள்

ஒரு வயது ம்ஹும்....
இரண்டாவது வயது ம்ஹும்.... ஞாகபகம் இல்லை
மூண்றாவது வயது சத்தியமா எதுவும் குறிப்பிடும் படியாக ஞாபகம் இல்லை...
நான்காவது வயதில்.... ஆம் சில சில ஞாபகங்கள் வருகின்றது...... ஆனால் சிதறல் சிதறலாக அங்கு மிங்குமாக.......

நர்சரிக்கு அம்மா காலையில் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போவது ஞாபகம் இருக்கின்றது..

நர்சரி ரீச்சரின் பெயர் பால.... என்று தொடங்குகின்றது சரியாக ஞாபகம் இல்லை. எல்லாரும் வீடு சென்றபின்னரும் நான் அம்மாவின் வருகைக்காக காத்து இருப்பேன்....... அம்மா அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் என்பதால் அம்மா வர எப்பிடியும் 1.30 ஆகும். அதுவரைக்கும் நர்சரி ரீச்சரின் பேத்தியுடன் விளையாடியதாக ஞாபகம். பேத்தியின் பெயர் ஜனனி என்று நினைக்கின்றேன். சில வருடங்களிற்குப் முன்னர் இவர்களைப் பற்றி அம்மா ஒரு நாள் சொன்னா நர்சரி ரீச்சரும் அவரின் முழு குடும்பமும் கனடாவில் செட்டிலாகிட்டதாய். இதுக்கு மேல் ஜனனி பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது... அவ முகம் கூடி எனக்கு இப்ப ஞாபகம் இல்லை...

இதுக்குப் பிறகு பாடசாலைக்கு போனது நல்லா ஞாபகம் இருக்கு அப்போது நான் சேர்ந்த பாடசாலை கோனேஸ்வரா வித்தியாலயம். பாடசாலைக்குள் நுழைந்தபேது கஜேந்திரன் எனும் பொடியன் ஜன்னலில தொங்கிக் கொண்டிருந்ததும் நல்ல ஞாபகம் இருக்குது. இப்ப இவன் யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றான். இவங்கள விட சங்கர்கணேஷ், தேவ்காந், ஜெகன்.... இவங்களெல்லாம் இப்ப எங்கையோ தெரியாது.

பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கலாம் அதுக்குப் பின்னர் சுவருக்கு மறுபக்கமுள்ள இந்துக் கல்லூரிக்குப் போக வேண்டும். ஆனால் நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது இரண்டு பாடசாலைகளையும் ஒரு பாடசாலையாக்கி மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
http://www.tcohindu.org

முதலாம் வகுப்பில் பாலேஸ் ரீச்சர். இப்ப கண்டாலும் சைக்கிளால இறங்கி குட்மோர்ணிங் சொல்லுவன். இப்ப ஓய்வு பெற்று விட்டா. ஆங்கிலம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களையும் இவரே படிப்பிப்பார். நாம் படிக்கும் போது நான்காம் ஆண்டு வரை எமது இலங்கை பாடவிதானத்தில் ஆங்கிலம் இருக்கவில்லை. நான்காம் ஆண்டுக்கு போக பயப்பிட்ட காரணங்களில் ஒன்று ஆங்கிலம் தொடங்குகின்றது, இரண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, மூண்று என் பிரியமான பாலேஸ் ரீச்சர் போய் புது ரீச்சர், பெயர் ஜெயகலா வருகின்றார். எதிர் பார்த்ததைவிட எம்முடன் அன்பாகவே இருந்தார்.
எட்டு வயதில் என்றுதான் நினைக்கின்றேன் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுவிஸ்லாந்து சென்ற ஞாபகம் இருக்கின்றது. அவரை வழி அனுப்ப கொழும்பு வந்த போது புறக்கோட்டை அரசமரத்தடியில் துலைந்து போய் அழுது கொண்டு நின்றதும் பின்பு கடலை விற்கும் ஒரு சிங்களவன் என்னை போக்குவரத்து கண்காணிப்பு பொலீசிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டதும் நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது. இப்போது கூட அவ்விடத்தால் செல்லும்போது ஒரு தடவை மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். அந்த கடலை வியாபாரியை மட்டும் ஞாபகம் இல்லை........

நான்காம் வகுப்பில்தான் என் வாழ்கையில் பயங்கரமான விபத்து நடந்தது. அது வரை சுகந்திரப் பறவையாக பறந்து திரிந்த என்னை ரியூசன் எனும் கூட்டுக்குள் அடைத்து விட்டப்பட்ட நாள். அதுவும் நகரிலேயே கடுமைக்குப் பெயர் போன தனம் அக்கா எனும் ரீச்சரிடம். இவரிடம் நான் வேண்டாத பேச்சு என்ன வேண்டாத அடி என்ன. பல தடவை அம்மா நான் செய்த குற்றங்களிற்காக ரியூசன் வகுப்பு ரீச்சரை சந்தித்து இருக்கின்றா. உதாரணமா ஒரு நாள் நாங்களெல்லாம் ரியூசனுக்கு முன்னால் உள்ள மைதானத்தில் கிரிகட் விளையாடினோம் எங்கள் அனைவரையும் 10 ம் வகுப்பு மாணவர்களை ஏவி விட்டு கைது செய்து முட்டிபோட்டு வெய்யிலில் நிக்க வைத்தா அந்த ஆத்தா. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவரால் தான் நான் புலமைப்பரிசில் பரீட்சை முதல் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சை வரை சித்தி எய்தினேன்.

இந்தக் காலமெல்லாம திரும்பி வராது இப்போது இயந்திரத்தனமான வாழ்கை. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு பின் பஸ் தரிப்பிடத்திற்கு ஓடி அங்கிருந்து 138 ம் இலக்க பஸ் எடுத்து கம்பஸ்சுக்குபோய்...... இப்படியே அலுப்பான வாழ்க்கை..... செய்ததையே திருப்பி திருப்பி செய்யும் வாழ்க்கை.

பேசுவதற்கோ அரவணைப்பதற்கோ அம்மாவும் அருகில் இல்லை. சண்டைபோட தங்கையும் அருகில் இல்லை.... போதுமடா சாமி இந்த பாழ்பட்ட நரக கொழும்பு வாழ்க்கை......

இரண்டாம் பாகம் விரைவில்.......

8 மறுமொழி:

said...

எழுதுங்க,எழுதுங்க!
கொஞ்சம் சந்தோஷம் & துயரமாகவும் உள்ளது.
சில வார்தைகள் எனக்கு புரியவில்லை.
ரியூசன்-அப்படியென்றால் என்ன?

said...

ரியூசன் என்றால் பாடசாலையைவிட மேலதிகமாகச் செல்லும் பிரத்தியேக வகுப்பு.
இந்தச் சொல்லு இலங்கையில் வலு பிரபலம். யாழ்ப்பாணத்தில் பாடத்திற்குப் போறம் என்று சொல்லுவினம்

said...

I really enjoyed reading your post.

Thanks.

said...

nenga solvadu unmaithan mayuran meendum,meendum ore madiriyaga sulalum enda colombo valkai bore than.

said...

வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
திருகோணமலை இந்துக்கல்லூரி வாழ்கவே

ஆதியந்தம் இல்லாத ஆண்டவன் தெய்வம்
அன்னையும் பிதாவும் எங்கள் முன்னறி தெய்வம் ;-)

said...

http://www.tcohindu.org வேலை செய்யுதில்லை. http://www.trincohindu.sch.lk/ வேலை செய்யுது. பழைய பிரின்சிப்பல் தண்டாயுதபாணியும் இப்பத்தைய ராஜரட்டினமும் ஹிண்டுகொலீசிலை சேரேக்கை இப்பத்தைய வைஸ் பிரின்ஸிப்பல் பத்மசீலனும் பிரி சசிகுமாரும் ஏஎல்லுக்கு வருகினம். காலம் ஓடுற ஓட்டத்தைப் பாரும்

பெரியகடை தனம் ரீச்சர் குடும்பத்திட்டைப் படிக்கேல்லை. ஆனா படிச்சவையைத் தெரியும். நீர் சொல்லுற கண்டிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்

said...

என்ன மயூரேசன் ,
வாழ்க்கையில் அடிபட இன்னும் பல இருக்கு , இதுக்கே சலிச்சா எப்படி ?

said...

இயந்திர வாழ்க்கை அலுத்துத்தான் போட்டுது