8 May 2007

சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!

வலைப்பதிவர் கவனத்திற்கு....
இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!

http://mayuonline.com/


தமிழ் வலைப்பதிவு


English Blog

சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!

வலைப்பதிவர் கவனத்திற்கு....
இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!

http://blog.mayuonline.com

24 April 2007

72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!



பேச மனம் துடிக்கும்...
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

16 April 2007

71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை - Meme)

நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது.

இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு - கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.

நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம். இது முன்பு இணைந்து இருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.

இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.

நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.

சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.

நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்...!!!!

9 April 2007

70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்


மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?

The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.

கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.

வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.

ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.

பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.

சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.

மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.
இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).

மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.

கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.

இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.

இப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.

ஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது!!!

கடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.

கிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (Dambledore’s Army) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா!!! இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.

கடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா? எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா? என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.

அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். I just can’t wait till I lay my hands on the next book என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ!!!!

அடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

7 April 2007

69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்




ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.



ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!

2 April 2007

68 : என்னருமைக் காதலி கணனி

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் ... விஷ... என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்....!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்.....)

23 March 2007

67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை


உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.

அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.

கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.

டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.

சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.

ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்... அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.

கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.


இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.


கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.

இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.

ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.

கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்... என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.

இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.

பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.)

20 March 2007

66 : நினைவுகள் IV

இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!

என்மனதில் இருந்து பல நினைவுகள் அகன்று விட்டபோதும் சில நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல பசுமையாக உள்ளன. ஏற்கனவே உங்களுடன் என் நினைவுகளை மூன்று தடவை பகிர்ந்தேன். இப்போது நான்காம் தடவையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன் காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் கடும் ஆர்வம். லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று அனைத்து காமிக்சுகளையும் வாசித்து முடித்து விடுவேன். அன்று என் நண்பன் ஒருவன் என்னிடம் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டுத்தருவதாகக் கூறி என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அந்தப் புத்தகத்தை தன் ஆங்கிலப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டான்.

மாலை தனம் டீச்சரிடம் வகுப்பு. அவர்தான் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞாணம் ஆகிய பாடங்களை கற்பிற்பார். இந்தத் தனம் ரீச்சரைப் பற்றி நான் பலதடவை கூறி இருக்கின்றேன். கண்டிப்பு ஒழுக்கம், கலாச்சாரம் என்பவற்றை கண்ணாகக் கண்காணிப்பார். யாராவது பிசகினால் அடித்து நெளிவெடுத்து விடுவார். நண்பன் நான் கொடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அன்று பார்த்து வெளியே எடுக்காமல் அப்படியே கொண்டுவந்து டீச்சருக்குப் பக்கத்தில இருந்திட்டான். அவர் கற்பிற்பதற்காகப் புத்தகம் கேட்டபோது காமிக்ஸ் புத்தகத்துடன் சேர்த்து ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான். பின்பு என்ன மயூரேசன் எழுப்பபட்டு பல கேள்விகள் கேட்கப்பட்டார். அத்துடன் காமிக்ஸ் புத்தகம் அனைத்தும் என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. என்ன செய்ய ஒட்டாண்டியாகி எந்த காமிக்ஸ் புத்தகமும் இல்லாமல் தனிமரமாக்கப்பட்டேன்.

இதே வேளை நான் மாட்டுப் பட்டவுடன் அவர் அதை பெரிதாக எடுக்காத மாதிரிக் காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் உங்களிடம் எத்தனை காமிக்ஸ் புத்தகம் உள்ளது என்று விசாரித்தா. உசாரான மாணவர்கள் தங்களிடம் 20, 30 என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லலாயினர். எல்லாரும் சொல்லி முடிந்ததும்
“சரி இப்ப எல்லாரும் வீட்டுக்குப் போய் உங்கட புத்தகம் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாங்கோ!”

அப்பத்தான் எல்லாரும் ஓடி முழிச்சாங்கள். என்ன முழிச்சு என்ன பிரயோசனம் அதுதானே கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் ஆகிட்டுது.

மாலை நேர டியூசன் வகுப்பில் இப்படி என்றால் ஒரு நாள் பாடசாலையில் பெரும் சங்கடமான காரியம் ஒன்றை நிறை வேற்றினேன்.

வழமைபோல மதிய இடைவேளைக்குப் பிறகு கணக்குப் பாடம் தொடங்க இருந்தது. இன்னமும் ஆசிரியர் வரவில்லை. வழமையாக முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். இன்னமும் வராதது எமக்குச் சந்தோஷமாகவே இருந்தது. நேரம் போக போக சேர் இனிமேல் வரமாட்டார்டா என்று சத்தமாகச் சத்தமிடும் அளவிற்கு சந்தோஷம் புரைகடந்து ஓடிக்கொண்டு இருந்தது.

இந்தவேளையில் எங்கள் வகுப்பு நண்பன் ஒருவன் சத்தம் போடாமல் நழுவிக்கொண்டு வெளியே போவதை இன்னுமொரு நண்பன் கண்டுவிட்டான். போய் மறந்து போய் இருக்கிற ஆசிரியரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயத்தில் அதை எனக்கும் வேறு சொல்லிவிட்டான்.

“டேய் எங்கடா வெளியால போறாய்?” நான் சத்தமிட்டுக் கேட்டேன்.

“வயிறு கொஞ்சம் அப்செட்டடா!.. “ வயிற்றைத் தடவிக்காட்டியவாறே நகர்ந்தான்.

போடா போ... இன்டைக்கு உனக்கு ஆப்பு வைக்கிறன்டா. என் மனம் சொல்லிக் கொண்டது.

இரண்டொரு நிமிடங்களில் நான் பூட்டியிருந்த கழிவறை வாசலில் நின்று நாய் பூனை என்று எனக்குத் தெரிந்த மாதிரி விலங்குகளின் குரலில் எல்லாம் ஒலி எழுப்பினேன். உள்ளே இருந்து சத்தம் வரவேயில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரிக்கவே நான் சில கூளாம் கற்களைப் பொறுக்கி வந்து கதவின் மேல் இடுக்கினாலும் கீழ் இடுக்கினாலும் உள்ளுக்குள் எறிந்துகொண்டே இருந்தேன். இன்னமும் உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை. குறைந்த பட்சம் டேய் யார்டா அந்தக் குரங்கு என்று கூட சத்தம் வரவில்லை.

மிகுந்த ஏமாற்த்துடன் அவ்விடம் விட்டு நகர முட்பட்ட போது எனக்கு இன்னுமொரு எண்ணம் வந்தது. அதாவது மேல் மாடிக்குச் சென்று நண்பன் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது அவனின் மீது கொஞ்சம் நீர் ஊற்றலாம் என்பதுதான் அது.

நினைத்ததைத் செய்து முடிக்கும் நோக்குடன் போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு மாடியில் ஏறி நின்றேன். நேரம் நகர்கின்றது இன்னமும் அவன் வரவில்லை.

திடீர் என்று எனக்குப் பின்பக்கம் இருந்து ஒரு கை என் தோழில் விழவே நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே என் நண்பன்.

“டேய் நீதானே உள்ளுக்க போனாய்?”

“நானா? கழிவறைக்குள்ளையா? போடா விசரா, நான் கன்டீனுக்குப் போய் இரண்டு கட்லட் சாப்பிட்டிட்டு வாறன். உண்மையைச் சொன்னா நீங்களும் இழுபட்டுக்கொண்டு வருவியளே. அதுதான் வயிறு சரியில்லை என்டு சொன்னான்”

“ஆ...சரி.. சரி” சொல்லிக்கொண்டு என் கைதானே போத்தலைக் கீழே நிலத்தில் வைத்தது. இப்போது கீழே எட்டிப் பார்த்த போது கழிவறைக்குள் இருந்து எமது கணக்கு வாத்தியார் வெளியிலே வந்து கொண்டிருந்தார். பாடம் கற்கத் தயாராக நாங்கள் வகுப்பை நோக்கி ஓடினோம். (என்னுடன் இத்தனை காலம் இருந்த இரகசியம் இன்று இணையத்தில் யுனித் தமிழில் அரங்கேறிவிட்டது :))



வீர தீரப் பயணங்கள் தொடரும்......

12 March 2007

65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்



போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.

உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.

உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது.

உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!

இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.

அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.

சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
“ யார்?” சரத்

“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.

சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.

உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.

இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.
பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.

5 March 2007

64 : முதுமையின் உறவு

மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.

வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்?” நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.

“நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான்” சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.

“பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன்” மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

“கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு”

“நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத”

“அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும்” கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது.

“அப்பனே முருகா!” வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.

முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.

மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.

மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அன்றிரவு மங்களம் தன் கணவருடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.
“இஞ்சருங்கோ! அம்மாவிண்ட விளையாட்டுத் தெரியுமே?”

“என்னப்பா! சொன்னியள் என்டாத்தானே எனக்குத் தெரியும்.. சும்மா புதிர் போட்டுக்கொண்டு இருக்கிறியளே!”

“அம்மா இவன்... எங்கட குமரனுக்கு வேண்டி வைச்சிருக்கிற சின்னப் பிள்ளைகளின்ட பிஸ்கடை எடுத்துக் கொண்டு போய் பின்னால இருக்கிற கொட்டிலுக்குள்ள வைச்சு சாப்பிடுறா. நான் கண்டும் காணாத மாதிரி விட்டிட்டன். வயது போன காலத்தில அதுகளுக்கு இப்படி சின்னச் சின்ன ஆசைகள் பாருங்கோ” வாய் முழுக்க புன்னகையுடன் கூறினாள் மங்களம்.

“ம்... கொஞ்சக் காலத்தில எங்கட பொடியன் குமரனும் அவனின்ட மனுசியோட எங்களப் பற்றி இப்பிடித்தான் கதைப்பான்” பதில் கூறிய மங்களத்தின் கணவர் சுந்தரேசனும் தன்பாட்டுக்கு தானும் தன் மாமியாரின் விளையாட்டை நினைத்துச் சிரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் கையில் ஒரு பையுடன் ஆர்வமாக வீட்டினுள்ளே நுழைந்தார். வந்தார். பின்னர் தன் மகனை நோக்கி.

“டேய் கள்ளப் பொடியா இங்க வாடா உனக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்கிறன்” கீழே குந்தியிருந்து பையைத் திறப்பதற்கு ஆயத்தமாககிக்கொண்டே தன் செல்வப் புதல்வனைக் கூப்பிட்டார். வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறையவும் புன்னகையோடு.

அந்தப் கடதாசிப் பையினுள் கையைவிட்டு அதனுள் இருந்து ஒரு பொருளை எடுத்து வெளியே விட்டார். சின்னஞ்சிறிய வெள்ளைப் பூனைக் குட்டி. கண்கள் துறு துறுவென்று இருந்தது. குமரன் அந்தக் குட்டியை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான்.

“அப்பா என்ன பெயர் வைப்பம்?” குளந்தைக்குரியே அதே பிரைச்சனை.

“ம்.. உனக்கு விருப்பமான பெயரையே வையப்பு”

“அப்ப நான் டைகர் எண்டு பெயர் வைக்கட்டே? டேய் குட்டி டைகர் நீ நல்லா எலி பிடிப்பியாடா?”

“மியாவ்..” ஆமாம் என்பது போல சத்தம் இட்டது பூனைக்குட்டி.

பூனையின் சத்தம் கேட்டதும் கதிரையில் வழமைபோல உறங்கிக்கொண்டு இருந்த கண்ணம்மா படபடப்புடன் விழித்து எழுந்துகொண்டார்.

“உதென்ன கோதாரி விழுந்த சாமான். உதை என்னத்துக்கு வீட்டுக்கு கொண்டு வந்தனியள், பேசாம கொண்டு போய் சந்தையில விட்டிட்டு வாங்கோ” முகம் முழுக்க வெறுப்புடன் கூறினாள் மணியம்மா.

மணியம்மாவின் என்றுமில்லாத கடுகடுப்பினால் முகம் கறுத்துப்போன சுந்தரேசன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.

“ஏன் அம்மம்மா டைகரை பேசிறியள். அவன் நல்ல பொடியன். நீங்க ஒருக்காத் தூக்கிப் பாருங்கோ” பாட்டியை நோக்கிச் சென்றான் குட்டிப்பயல் குமரன்.

“சீ... சீ.. அங்கால கொண்டு போ” எரிந்து விழுந்தாள் மணியம்மா. ஏமாற்றத்துடன் சிறுவனும் அவ்விடத்தில் இருந்த தன் புதிய நண்பனோடு நகர்ந்து விட்டான்.

அன்று இரவு வழமைபோல சுந்தரேசனும் மங்களமும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
“ஏன் இந்த மனுசி வர வர இப்பிடி மாறுதோ தெரியேல!!!” சலித்துக்கொண்டாள் மங்களம். என்னதான் தாயானாலும் தன் கணவரை அவர் அவ்வாறு பேசியது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்வில்லை.

“சரி.. பரவாயில்லை விடுங்கோ. வயது போன காலத்தில அவையள் அப்பிடித்தானே” சுந்தரேசன் நிலமையை மேலும் மோசமாக்க முயலாமல் சமாளித்தாள்.

மறுநாள் காலை அவசரம் அவசரமாக கணவரும் மனைவியும் அலுவலகம் வெளிக்கிடும் போது பின் புறம் கொட்டிலினுள் குமரனின் சத்தம் கேட்கவே இருவரும் அங்கே ஓடிச் சென்றனர். அங்கே குமரன் கண்ணில் வெற்றியின் வெளிச்சம்.

“அம்மா டைகர் இண்டைக்கு ஒரு எலியைப் பிடிச்சிட்டுது... கூய்ய்ய்ய்ய்ய்ய்..... டைகர் கொட்டிலுக்க எலியப் பிடச்சிட்டான்” கீச்சிடும் குரலில் சத்தம் இட்டுக்கொண்டு கொட்டிலைச் சுத்தி சுத்தி ஓடத் தொடங்கினான்.

இதனிடையே சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்த மணியம்மா காதிலும் குமரனின் வெற்றிக் களியாட்டத்தின் சத்தம் கேட்கவே மேலும் வேகமாக ஓடி வந்தார். வந்தவர் வாசல படிக்கட்டில் தடக்குப் பட்டு தலையடிபட கீழே விழுந்தார்.

“ஐயோ!!!!!” ஒரு பெரிய சத்தம் .

இப்போ குமரனை சுற்றி நின்ற சுந்தரேசனும், மங்களமும் வாசல் படியை நோக்கி ஓடினர். அவர்கள் போய் சேர்வதற்குள் காரியம் யாவும் நிறைவு பெற்று இருந்தது.

வான வெளியிலே இப்போது மணியம்மா பறந்துகொண்டு இருந்தார். அவர் கணவரைக் காணப் போகும் மகிழ்ச்சி அவர் முகம் எங்கும் தெரிந்தது. கொஞ்சம் கீழே குனிந்து அவர் கையைப் பார்த்தால் அவர் பிஸ்கட் இட்டு வளர்த்த அந்த குட்டிச் சுண்டெலி கீச் ... கீச் என்று சத்தம் இட்டுக்கொண்டே அவரிடம் பிஸ்கட் வேண்டி அடம் பிடித்துக்கொண்டு இருந்தது.



தனிமையின் கொடுமையால் வாடும் முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்.

14 February 2007

63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)


இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும்.

என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.

அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.

காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.

போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.

நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.

சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?

இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!

தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........

மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்

“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்

“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.

சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு

“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.

வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.

பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.

“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்

“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.

இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது

“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்

“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.

“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”

“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.

“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”

“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”

“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”

“இல்ல மச்சான்........”

“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”

“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”

“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”

குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.

“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”

“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.

“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”

“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.

“ஓம்!”

“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.

பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.

“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.

கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.

தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.

“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.

இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.

மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!

உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.

“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”

“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.

கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.

“ஐம் சாரி இனோக்கா”

“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.

“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.

பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.

யாவும் கற்பனை

12 February 2007

62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)

பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குக
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” என்று அக்கறையாக விசாரித்தாள்.

“என்ன செய்வது பையை பிளேடால அறுக்க வேண்டியதுதான்” என்று வியர்வை முகம் எங்கும் வழிய வழியச் சொன்னேன்.

பையைவெட்டுவதற்காக பிளேடை எடுக்கப் போன போதுதான் ஞாபகம் வந்தது பிளேடும் பையினுள்தான் உள்ளதென்பது. சத்தியமாக வாழ்க்கையே வெறுத்து விட்டது.

அதே வேளையில் மற்றய கதிரையில் இருந்த நண்பர்களுக்கு விசயம் கொஞ்சம் மோசமாகப் போய்விட்டது என்பது புரிந்து விட்டது. அவர்களும் பையில் தம்பாட்டுக்கு ஏதேதோ முயன்று பார்த்து சலித்துப் போய் அமர்ந்து விட்டனர். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். அப்போது மீண்டும் அந்த சிங்களப் பெட்டை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டாள்.

இதைத் திறக்க நான் ஜேம்ஸ் பாண்டாகத்தான் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது 07 ஐ ஒருக்கா முயற்சித்துப் பார்ப்போம் என்று. இறைவனைவேண்டியவாறே திறந்த போது என்னே அதிசம் பை திறந்து கொண்டது. எல்லாம் கந்தன் கருணை!!!

வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு எல்லா நண்பர்களையும் பார்த்து, திறந்த விடையத்தை சைகையால் காட்டிச் சிரித்துக்கொண்டு இருந்தேன்.

நான் திறந்து முடித்தபோது சரியாக 1 மணி ஆகிவிட்டிருந்தது. யாரே மூவர் திடீர் என்று ஒரு அறைக்குள் இருந்து வந்து முதலில் முன்னுக்கு இருந்த பொடியனை வரச்சொல்லி கூப்பிட்டார்கள்.

அந்தப் பொடியனின் பட்டப் பெயர் யு.ஜி (UG). அதாவது அளவுக்கதிகமான நேரம் Undergraduate Lab ல் இருந்து இணையத்தைத் துளாவுவான் என்பதால் அந்தச் செல்லப்பெயர். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரனே!

அவன் உள்ளே சென்று அரைமணி நேரம் ஆனது என்ன செய்கின்றார்கள் என்பதே புரியவில்லை. நாங்கள் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தோம். சுமார் 35 நிமிடங்களின் பின்னர் யு.ஜி வெளியே வந்தான். வெளியே வந்தவனை எங்களிடம் வரவிடாமல் வேறேங்கோ அழைத்துச் சென்றார்கள்.

“டேய்...!!!! என்னடா நடக்குது இங்க? இன்டஸ்ரியல் ரெயினிங்குக்கு இது அதிகம்டா” நண்பன் ஒருவன் சலித்துக்கொண்டான்.

சற்று நேரத்தில் ஒரு தலை வெளியே எட்டிப்பார்த்து மஞ்சுளா பிரேமரத்ன... என்று சொல்லியது. அவ்வளவுதான் எனக்குப் பக்கதில் இருந்த சிங்களப் பெட்டை பாய்ந்தடித்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடந்த அறையை நோக்கி ஓடினாள்.

அடுத்தது யாரோ என நினைக்கயிலேயே நெஞ்சு படபடத்துக்கொண்டது. அடுத்த அரை மணி நேரத்தின் பின்பு மஞ்சுளாவும் வெளியே வந்தாள். மீண்டும் அதே தலை எட்டிப் பார்த்து டினூஷ டீ சில்வா என்று சொல்லியது. என் நண்பன் டினூஷ அறையை நோக்கி நடந்தான்.

மீதம் இருந்த மூவரும் மஞ்சுளாவை சுற்றி நின்று கேள்விகளால் ஒரு வேள்வி வைக்கத் தொடங்கினோம்.

“என்ன கேட்டாங்கள்? படிப்பு சம்பந்தமாக் கேட்டாங்களா? பொது அறிவு பார்த்தாங்கள்?” தெரிந்த கேள்வி எல்லாம் கேட்டாங்கள்.

அவளும் கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், VB .net மற்றும் SQL ல் அதிகம் கேள்விகள் கேட்பதாகவும் கூறினாள். அதைவிட யு.ஜி யை ஒரு செய்முறைப் பரீட்சைக்கு அனுப்பிவிட்டதாகவும் தனக்கு அடுத்து நடக்கவுள்ளதாகவும் கூறினாள். எனக்கோ தலை சுற்றத் தொடங்கியது. இப்போ எதுவும் ஞாபகம் இல்லையே!! ???

கடைசியாக என் சந்தர்ப்பமும் வந்தது. நான் பயத்துடன் நேர்முகத் தேர்வு நடந்த அறையை அடைந்தேன். அங்கே மூவர் இருந்தனர். எல்லாரும் நடுத்தர வயது மதிக்கத் தக்கவர்கள்.

நான் உள்ளே போனதும்...
“Hello Sir! I’m Mayooresan” என்று சொல்லி நடுவில் இருந்தவருடன் கையைக் குலுக்கினேன் அவரும் மற்றயவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு என்னை இருக்கச் சொல்லி விட்டு என்னைப் பற்றி அறிமுகம் ஒன்று வழங்குமாறு கேட்னர். நானும் ஒரு அறிமுகத்தை வழங்கினேன். அடுத்து கேள்விக் கணைகள் தொடங்கியது.

1.ரிக்கர்சிவ் பங்சன் ஒன்று எழுதுங்க!!! எனக்கு தலைகால் புரியவில்லை... தந்த காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டுக் கூறினேன். Sorry sir I can’t remember this..!!!

அப்போதும் அவர்கள் விடுவதாக இல்லை அப்படியானால் ஒரு பங்கசன் அதுக்கு எழுதுங்க பார்ப்பம். சரி என்று எழுதி முடித்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு அதில் ஒரு நொட்டை சொன்னான் அந்த நெட்டைப் பயல்.

பின்பு VB .net ல் சில கேள்விகள் கேட்டான். Inheritance பொன்ற OOP சம்பந்தமான கேள்விகள் கேட்டான் சில கவிண்டது சில சரியாகச் சொன்னேன். கடைசியாகக் கேட்டார்கள் எனக்கு ஒரு செய்முறை வைக்க வேண்டும் என்று!!!

உடனே நான் தயங்காமல் சொன்னேன் “ஆ... இண்டைக்கு நான் தயார் இல்லை, இன்னுமொரு நாளைக்கு செய்யலாமா?”

“ஓம் கட்டயாமா!” என்று சொன்னார்கள். அத்துடன் இரண்டு நாட்களின் பின் செய்முறைப் பரீட்சைக்கு வருமாறும் கூறினார்கள்.

இரண்டு நாட்கள் கழிந்து எக்சாம் செய்தேன் லைப்ரரி இன்ஃபோமேசன் சிஸ்டம் ஒன்றை முழுதாக 2 மணி நேரத்தில் செய்ய்ச் சொல்லி இருந்தார்கள். அதற்கு UML படங்களும் வேற கீற வேண்டுமாம். நான் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வந்தேன்.

சரி எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் இன்னுமொரு கம்பனி பார்க்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நாள் மாலை பல்கலைக்கழக வாசலினூடு நுழைந்து கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் வந்து தட்டினார்கள்.

“மயூரேசன் உங்களுக்குத் தெரியுமா நீங்க நாளைக்கு கைட்ராமணிக்குப் போகோனும் என்றது” முன்பு கவிட்ட அதே மிஸ் கேட்டா....

“இல்லை மிஸ்.. எனக்குத் தெரியாது?” பரபரக்கக் கூறினேன்.

“எனக்குத் தெரியும் நீர் தொயாது என்று சொல்லுவீர் எண்டு. அதாலதான் கண்டிட்டு ஓடி வந்தனான்” மிஸ் சிரித்தவாறே கூறினார்.

“நீரும் மிஹிசரவும் செலக்ட் ஆகி இருக்கீங்க நாளைக்கு இருவரும் அங்க போகோணும் உங்களோட அவங்க சில விசயங்கள் கதைக்கோணும் என்று விரும்பிறாங்க” என்று முடித்தார்.

எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதொ கடவுள் புண்ணியத்தில் நல்லதாக நடந்து முடிந்துவிட்டது. உலகவர்த்தக மையத்தில் 3 மாதத்திற்கு சுற்றும் வாய்ப்பும் கிடைத்தது....

நன்றி முருகா!!!! எல்லாம் உன் செயல் :)

சில படங்கள்....


நேர்முகத் தேர்விற்காகச் சென்ற நண்பர் குழாம்






காலைவாரிய பையுடன் மயூரேசன்......

அவசரத் தகவல் தந்துதவிய நண்பன் UG (உண்மைப் பெயர் புத்திக)



சும்மா ஒரு முயற்சிதான்!!






8 February 2007

61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு

அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.

"டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்".

செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?

எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.

ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.

பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.
"மிஸ்.. அ... எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?"

"ஓம்... உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?" மிஸ் எரிந்து விழுந்தார்.

"இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல" நான் மறுத்தேன்.

"தம்பி... நான் சொன்னனான் சரியா?... சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்" அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.

சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.

மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.

"டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா" சோகமாக நண்பனிடம் கூறினேன்.

"யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?"

"நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்" நான் சொன்னேன்.

கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.

கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.

நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்பர்கள். உலக வர்த்தக மையம் அதிக பாதுகாப்பான பிரதேசம். அங்கே இப்படியாக சிங்கள நண்பர்களுடன் செல்வதென்றால் பிரைச்சனை இல்லை.

அன்றுதான் முதல் தடவையாக உலக வர்த்தக மையத்தினுள் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது மிகவும் அழகாகத்தான்இருந்தது. வெளிநாடு ஒன்றில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நண்பர்களுடன் ஒருமாதிரி லிப்ட் இருக்கும் இடத்தை அறிந்து அதில் ஏறி 23 ம் மாடியை அடைந்து விட்டோம்.

லிப்ட் திறந்ததும் பெரிதாகத் தெரிந்தது Hydramani என்ற கம்பனியின் பெயரும் முன்னுக்கு இருந்த அழகான வரேப்பாளர் பெண்மணியும்தான்.

இப்போ இவனுகளுக்குள் ஒரே அடிபிடி யார் போய் ரிசப்சனிஸ்டிடம் கதைப்பது என்று. கடைசியாக எனக்கு அந்தப் பாக்கியத்தைத் தந்தார்கள்.

"We are from University of kelaniya.. We'd like to meet Mr. Mangala regarding our Industrial Training.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார் நாங்கள் வருவோம் என்பது முன்பே தெரியும் என்றும் அந்த விருந்தினர் இருக்கையில் இருங்கள் என்றும் கூறினார்.

நெஞ்சு பட பட என்று அடிக்கத்தொடங்கியது. நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பானுகளோ தெரியாதெ??? நண்பர்கள் வலு கூலாக இருந்தார்கள். நான் என்பாட்டுக்கு எனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தேன்.

இதே வேளையில் நான் என் சுயவிபரக்கோவை, மற்றும் சர்ட்டிபிகேட்டுகளை ஒரு பையினுள் இட்டு கொண்டு வந்திருந்தேன். அந்தப் பையிற்கு ஒரு இரகசியத் திறவுச் சொல்லும் இருந்தது. நாம் கடைசியாகப் பூட்டும் போது என்ன இலக்கம் இருக்குதோ அதுதான் அடுத்ததரம் திறக்கும் போது திறவுச் சொல்லாகப் பயன்படும்.

எனக்குப் பக்கத்தில் எங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வந்த எங்களுடைய பல்கலைக்கழக சக மாணவி இருந்தாள். அவளுடன் கதைத்தவாறே எனது பையின் லொக்கைத் திறந்து மூடி திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். திடீர் என்று லொக் திறக்க மறுத்தது.

இன்னும் 15 நிமிடத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப் போகின்றது. இந்த நேரத்தில் இந்தப் பை இப்படி சிக்கிக்கொண்டது. பையைத் திறக்காவிட்டால் என் CV, Certificates எதையும் எடுக்க முடியாது.

நெஞ்சு முன்பு எப்போதும் இல்லாத வாறு பட ... பட என்று அடித்துக்கொண்டது. கடுமையான ஏ.சிக்குள்ளும் வியர்க்கத் தொடங்கியது.

நான் பதட்டப் படுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிங்களப் பெட்டை." மயூரேசன்.. ஒவ்வொரு நம்பரா ரை பண்ணுங்க.. இன்னும் நேரம் இருக்குதுதானே?" என்று சொன்னாள்.

நானும் ஒவ்வொறு எனக்குத் தெரிந்த இலக்கங்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலையில்லை பை திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.

(தொடரும்.. அடுத்த பாகத்துடன் முடியும்.)

3 February 2007

60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்


























"Harry Potter and the Deathly Hallows," என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.

இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).

கடைசியாக வெளிவந்த புத்தகமான “Harry Potter and the Half-Blood Princes,” என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.

புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க....

30 January 2007

59 : போக்கிரி விமர்சனம்


சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.

 

தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

 

நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.

 

" டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?" (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)

 

" ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்." நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.

 

என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

" மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே? " நண்பன் வினாத் தொடுத்தான்.

 

உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.

 

விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.

 

வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார்.  

" வ்வீவீ.........ல்" தியட்டர் எங்கும் விசில் சத்தம்.

 

பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது.

 

அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள்.

அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.

 

அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.).

 

போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று.

 

படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது.

 

இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

 

பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர்.

 

வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.

 

இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது.

 

கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.

 

இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.

 

பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)

 

அன்புடன்,

ஜெ.மயூரேசன்.