9 September 2006

நினைவுகள் II

எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். பாரதி கூறியது போல நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....

ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. “சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா” என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.

ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...

முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.

“என்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?” பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.

ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். “உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்”. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் “தம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?” என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

“மயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...”

“ரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்”

“இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத”

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது (செல்வன் அண்ணா கொசுவர்த்தி கொழுத்த இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்த சொல்லமாட்டீங்க என்று நம்புகின்றேன்). இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.

ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

“டேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?”

“இல்ல அவர்தான் எழுதினவர்!”

“நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (மிசன் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....

2 மறுமொழி:

said...

I just read it today. As usual excellent.

said...

I just read it today. As usual excellent.