21 September 2006

21 : ஒரு பாடலில் ஒரு திரைப்படம்

ஒரு திரைப்படத்தை ஒரு பாடலினுள்ளேயே அடக்கி விடலாமா??? விடை ஆம். உங்களிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் கீழே உள்ள வீடியோ பாடலைப் பாருங்கள்.

திரைப்படத்தில் இருக்க வேண்டிய நாயகன், நாயகி, காதல், பெற்றோர் எதிர்ப்பு, கிராமம், மழை, பாடசாலை, தோல்வி, ஏக்கம் எல்லாமே உண்டு.






இது ஒரு சிங்களப்பாடல். சிங்களம் புரியாது என்று கவலைப் படாதீர்கள். பாடலைப் புரிந்து கொள்ள நீங்கள் வாழ்க்கையில் பத்து தமிழ் திரைப்படம் பார்த்திருந்தால் போதுமானது.

தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமாகி வரும் இராஜ் என்பவர் இசையமைத்த பாடல் இது. ஹிந்தி இசையில் களிக்கும் சிங்களவரை சிங்கள இசையை நோக்கி திரும்ப வைத்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருவர். இந்தப் பாடலில் நாயகியின் குடை பறந்து போய் ஒரு பஜுரோவில் மாட்ட அதை எடுக்க நாயகன் ஓடுவார். அந்த பஜுரோவில் குறுந் தாடியுடன் வருபவர்தான் இசைஅமைப்பாளர் இராஜ்.

பாடல் வரிகளை சிட்னி சந்திரசேகர என்பவர் எழுதியுள்ளார். பாடகியும் பிரபலமான சிங்களப் பாடகியே!.

பாடலில் வரும் நாயகன் கடைசியாக நடந்த Sirasa Super Star (American Idol போன்ற சிங்கள இளைஞர்களுக்கான போட்டி) ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அருமையாகப் பாடலை அனுபவித்துப் பாடியுள்ளார். இவரின் உண்மையான பெயர் மலித் இந்தப் பாடலிலும் இவரின் பெயர் மலித் என்றே பயன்பட்டுள்ளது.

நாயகனின் நாயகி பாடசாலையில் நடனம் ஆடுவதைப் ஒளிந்து நின்று பார்க்கின்ற போது தலமை ஆசிரியர் அதைக் கண்டு நாயகனைக் கண்டிக்கின்றார் அப்போது நடக்கும் உரையாடலை ஒரு உதாரணத்திற்கு உங்களிற்காக தமிழில் தருகின்றேன்.

த.ஆ : மலித் இங்க என்ன செய்யிறாய்?

மலித் : ஒன்றும் இல்லை சேர்

த.ஆ : என்ன பாக்கிறாய் உள்ளுக்குள்ள பெரஹெரா வருகுதா?

மலித் : ஓம் சேர்... இல்ல சேர்

நாயகி நடப்பதைப் பார்த்து சிரிக்கின்றார் (பாடலில் இவரின் பெயர் சஞ்சலா)
த.ஆ : ஓம் சேர்! இல்ல சேர்! நீட்டுடா கையை

மலித் கையை நீட்டுகின்றான் அடிகள் வீழ்கின்றது. சஞ்சலாவின் முகம் கறுத்து அழத் தொடங்குகின்றார். சஞ்சலாவின் நடன ஆசரியர் சஞ்சலாவிடம் கேட்கின்றார்..

“மலித்திற்குத்தானே அடி வீழ்ந்தது சஞ்சலா என்னத்திற்கு அழுகின்றாய்??”

இவ்வளவிற்குப் பின்பும் என்ன தயக்கம் கிளிக் செய்து பாடலைப் பாருங்களேன்.

5 மறுமொழி:

Jay said...

என்ன எச்சரிக்கை விடுறீங்க...
இதெல்லாம் இங்க பலிக்காது...

மு. மயூரன் said...

எமது வெகுமக்கள் கலைத்துறை தென்னிந்திய சினிமாவையே வட்டமடித்துக்கொண்டிருக்க, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு வளர்ச்சி மந்த்தித்த நிலையில் இருக்கிறோம்.
சிங்கள கலைத்துறை தனக்கு முன்னுள்ள சவால்களையொஎல்லாம் படிகளாக்கிக்கொண்டு நிறைய முன்னேறிவிட்டது. சிங்கள சினிமா இன்றைக்கு உலகத்தர சினிமாவாக இருக்கிறது. தமிழ் சினிமா இந்த தரத்தினை இப்போதைக்கு எட்டவே முடியாது.

நீண்டகாலமாகவே சிங்களப்பாடல்கள் பாடல் உள்ளடக்கத்தின் களத்தை பொறுத்தவரையில் விஒத்தியாசமாகவும் தரமாகவுமே இருந்துவந்துள்ளன. தொழிநுட்பமும் இசையும்தான் பரவலாக முன்னேறியிருக்கவில்லை. இன்று அந்த குற்றச்சாட்டுக்கும் இடமில்லை.


சிங்கள இசையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியவர்களுள் பாத்தியா சந்தோஷ் முக்கியமானவர்கள். இராஜ் அதற்கு பிறகுதான்.

G.Ragavan said...

பாடலைப் பார்த்து ரசித்தென். மிக நன்றாக இருக்கிறது. அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

மெல்லிசைதான் காலத்திற்கும் நிலைக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தப் பாடல்.

படப்பிடிப்பு இடங்களும் மிக அருமை. பாடகர்தான் நடிகரும் கூடவா....நன்றாக இருக்கிறார். பாடுகிறார். அழுகிறார். சிரிக்கிறார். கதாநாயகி நெளிந்து நெளிந்து ஆடுவது நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கைத்தாளம் ஒலிக்கும் காட்சி.

அதே போல சிறிது நேரமே வந்தாலும் மலித்தின் பெற்றோர்களும் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள். குறிப்பாக மலித்தின் தாயாரின் கைகளின் நடுக்கத்தைத் தேனீர்க் குவளை வழியாகக் காட்டியிருப்பது.

மயூரன், உலகத்தரம் என்பதே மாயை. தரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆங்கிலத்தில் வரும் பேரழிவுப் படங்கள்தான் தரத்தை நிர்ணயிக்கின்றன என்றால் தரம் குறைவே!

தமிழில் பெரும்பாலும் சினிமா வியாபாரம் செய்கிறார்கள். ஒரு சிலர் நன்றாகச் செய்கிறார்கள். நிலமை மாறும் என்று நம்புவோம்.

Jay said...

//மு.மயூரன்//
உங்கள் ஆதங்கம் புரிகின்றது மயூரன். ஆயினும் எங்கள் தமிழ் சினிமாவை ஒரேயடியாகக் குறை சொல்ல முடியாது. சிங்களவர் வர்த்தக ரீதியாகப் படம் எடுப்பது குறைவு. அதுவே அவர்கள் படங்களில் கருத்துச் செறிவிற்குக் காரணம். ஆனால் தமிழில் அப்படி இல்லை.
என்னதான் சிறப்பாக சிங்களப் படம் இருந்தாலும் சிங்களவர் ஹிந்திப் படத்தைத் தானே பார்க்கின்றனர்.
தமிழ் படங்களிற்கும் இதே நிலமை வந்திருக்கும் விருதிற்காகப் படம் எடுத்திருந்தால். ஆயினும் இத்தனையையும் தாண்டி தரமான தமிழ்ப் படங்கள் வந்திருப்பதையும் மறுக்க முடியாது.

Jay said...

//கதாநாயகி நெளிந்து நெளிந்து ஆடுவது நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கைத்தாளம் ஒலிக்கும் காட்சி//
என் உள்ளம் கொள்ளை கொண்ட காட்சியும் அதுதான். அழகான நாயகி அழகான நடனம்.

//நிலமை மாறும் என்று நம்புவோம்//
ம்... நம்புவோம்!