25 September 2006

22 : சீ.. துஷ்டனே


கதிரவன் சதிராடத் தொடங்குகின்ற நேரமது. பட்சிகள் கீச்சிடுகின்றன, வண்டுகள் ரீங்காரமிட்டவாறே அன்றலர்ந்த பூக்களைத் தேடி ஓடுகின்றன, தேனீக்கள் அவற்றுடன் போட்டியிடுகின்றன. எங்கோ தூரத்தில் ஒரு ஆண் குயில் துணை தேடி இசை பாடுகின்றது. இயற்கையை இரசித்தவாறே இரு துறவிகள் நடந்து வருகின்றனர். உலக நியதிகளைப்பற்றி அலசி ஆராய்கின்றனர்.

“குருவே ! இந்த வையகத்தில் இத்தனை அழகு இருந்தும் ஏன் இந்த மானிடர்கள் அதை விடுத்து அறியாமையில் மாட்டித் தவிக்கின்றார்கள்?”

“ஹூம்.... அது அவர்கள் ஊழ்வினை, முற்பிறப்பில் செய்த ஊழ் வினையை இப்பிறவியில் அனுபவிக்கின்றார்கள். எல்லாம் அவன் செயல்..”

“அப்போ விதியை வெல்ல முடியாதா குருவே!” ஆர்வமாகக் கேட்கிறான் அந்த இளவயது சீடன்.

“நிச்சயமாக முடியும் அதற்கு நீ இவ்வுலகின் நிலையாமையை முதலில் உணர வேண்டும். பணம், பெண், பாசம், உறவுகள் அனைத்துமே பொய் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் பலபேர் அதை உணர்ந்து கொள்வதில்லை”.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு வரும் வேளையில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆற்றில் அப்போது சிறிது அதிகமாகவே வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. அதற்குச் சான்றாக கரையிலே வெள்ளம் நுரைகளைத் தள்ளியவாறே துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டு இருந்தது.

இத்தனைக்கும் மேலே ஆற்றங்கரையிலே ஒரு அழகுப் பதுமை போன்ற இள நங்கை ஒருத்தி நின்று கொண்டு இருக்கின்றாள். அவள் கண்களில் பயம் தெரிகின்றது. ஆற்றின் வெள்ளம் பாவம் அவளை மிரட்சி அடைய வைத்துவிட்டது. மான் விழிகளை உருட்டி உருட்டி அங்கும் இங்குமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவ் வேளையில் இரு துறவிகளும் இந்த நங்கையைத் தாண்டிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.

“குளந்தாய்! ஏன் இங்கே தனியே நின்று கொண்டு இருக்கின்றாய். காட்டு மிருகங்கள் உலாவும் இடமிது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று விடு” பரிவுடன் கூறினார் குருநாதர்.

“துறவியாரே! ஆற்று வெள்ளம் புரை கடந்து ஓடுகின்றது. பார்க்கவே பயமாக இருக்கின்றதே??”

“பயப்பட வேண்டாம். நான் இதைக் கடந்துதான் செல்லப் போகின்றேன்” இவ்வாறு கூறிவிட்டு குருநாதர் கட கட வென ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் ஆற்றைக் கடந்து மறு கரையேறிய துறவியார் தன் சீடனைக் காணவில்லையே என்றெண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தார். ஐயகோ! என்ன அநியாயம் அவரினால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.

எனது சீடனா இது?? சீ இவனைப் போய் என் சீடனாக ஏற்றுக்கொண்டேனே. சலித்துக்கொண்டார் குருநாதர். ஆற்றின் மறு கரையிலே சீடன் அந்த நங்கையை தன் தோழில் தூக்கி அமர்த்தி ஆற்றைக் கடந்து கொண்டு இருந்தான்.

தற்போது சீடன் பெண்ணைக் கொண்டு வந்து மறுகரையில் இறக்கி விடுகின்றான். பெண் தலை கவிழ்ந்து நன்றி சொல்லி விட்டு அவ்விடத்தில் இருந்து நகர்கின்றாள்.

குருநாதர் எந்தப் பேச்சும் இன்றி விறு விறு என நடக்கின்றார். இவன் தன் குருவிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணராத சீடனும் இல்லை.

அந்திமாலை நேரமது, சிறிது நேரத்தில் இருட்டப்போகின்றது. சூரிய சம்ஹாரம் செய்துவிட்ட களிப்பில் சந்திரன் வானத்திலே நட்சத்திரங்களுடன் உலாவரத் தொடங்குகின்றான். எங்கும் குளிர்மை எதிலும் குளிர்மை. செடி கொடிகள் தம்மை சிலுப்பிக்கொண்டு நிற்கின்றன, பற்றைகளில் இருந்து பூச்சிகள் ஒரு வித ஒலியை எழுப்பி இருட்டின் மர்மத்திற்கு மர்மம் சேர்க்கின்றன. ஆயினும் குரு நாதரின் உள்ளம் மட்டும் அனலாய் கொதித்துக் கொண்டு இருந்தது.

“குருநாதரே! தங்களிடம் அடியேன் சிறு மாற்றத்தை காண்கின்றேன். தங்கள் உள மாற்றத்திற்கான காரணத்தை அடியேனுக்கு விளம்புவீர்களா?” பெளவியமாகக் கேட்டான் சீடன்

“சீ.. துஷ்டனே! உன்னைப் போய் என் சீடனாக ஏற்றுக் கொண்டேனே!. ஒழிந்து போ! என் கண்முன்னே நிற்காதே. நான் இவ்வளவு போதித்த பின்பும் அந்தப் பெண்ணைத் தீண்ட உனக்கு என்ன தைரியம்?. இக்கணம் முதல் நீ என் சீடன் இல்லை. உன்கை கறை படிந்த கை. பரந்தாமனிற்கு பூப் பறிக்கும் உன்கை அந்த பாவையைத் தொட எப்படித் துணிந்ததோ?”. தன் உள்ளக் கிடக்கை கொட்டித் தீர்த்தார் குருநாதர். ஆவேசத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சும் வாங்கிக்கொண்டார்.

“ஓ. அதுவா பிரைச்சனை! ஆற்றங்கரையில் சுமந்த பெண்ணை மறு கரையில் யாம் இறக்கிவிட்டோம். குருநாதா தாங்கள் இன்னும் சுமக்கின்றீர்கள் போல உள்ளதே!”

அத்தனை இருளிலும் தன் சீடன் ஒரு அறிவு வெள்ளமாக குருவிற்குத் தெரிந்தான். கண்களில் கண்ணீர் மல்க தன் சீடனை ஆரத் தழுவினார் அந்தக் குருநாதர். அவரின் கண்களில் இருந்து வழிந்தது ஆனந்தக் கண்ணீர் அல்ல தன் அறியாமையை எண்ணி வெட்கியதால் ஏற்பட்ட கண்ணீர்.

4 மறுமொழி:

said...

தெரிந்த கதை. அழகான தமிழில் மீண்டும் படைத்ததற்கு நன்றி.

இந்த கதையில் நீங்கள் சொல்ல விரும்பிய கருத்து என்ன?

நன்றி

said...

முதலில் உங்கள் பாராட்டிற்கு நன்றி!

கதையில் கூறியது "யானைக்கும் அடி சறுக்கும்"...

அதாவது எல்லாம் தெரிந்தவர் என்று யாரும் இல்லை!

said...

Nice story ya...
In your style
Kumaran

said...

//Nice story ya...
In your style//
Thanks ya....