6 October 2006

30 : எனக்கு எப்போ விடுதலை - தேன் கூடு போட்டிக்காக.


யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.

பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.

“அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது”. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.

“வாங்கோ அண்ணே!”

நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.

“பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது”. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.

“சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு” அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.

“அப்ப நான் வாறன்”

“சரி அண்ணே”

விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.

“அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்??” மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.

பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.

“முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா..” அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.

முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.

வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.

“விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே !” வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.

அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.

இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.

இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.

“ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத” விடு விடு எனப் பேசி முடித்தாள்.

ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.

முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.

அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.

சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.

“வாங்கோ..மச்சாள்..”

“அம்மா என்னபாடு??” வழைமையான கேள்வி.

“அதே நிலைமைதான் மச்சாள்” இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.

பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.

தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

“அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா” விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.

“ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..”

“இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள்” சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.

ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

“இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல” கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.

சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.

மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.

எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.

குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.

12 மறுமொழி:

said...

'எனக்கு மட்டும் ஏன் இப்படி'வாசித்திருந்தபடியால் உம்மிடமிருந்து இதுக்கு மேலே எதிர்பார்க்கவில்லை. சமூகத்தின் உழுத்துப்போன கட்டமைப்புக்கு மறைமுகமாக உங்களை அறியாமலே நீர் ஊற்றி வளர்க்கின்றீர்கள். மற்றும்படி கதை எழுதும் தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.

said...

ஐயா,
இலங்கை தமிழில் எது கண்டாலும் ஒரு இனம் தெரியாத பாசம்( இனப் பாசம் ) வந்து விடுகிறது.கதை நன்றாக உள்ளது. மச்சாள் என்ற புதிய தமிழ் சொல்லையும் தெரிந்து கொண்டேன். நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

said...

//சமூகத்தின் உழுத்துப்போன கட்டமைப்புக்கு மறைமுகமாக உங்களை அறியாமலே நீர் ஊற்றி வளர்க்கின்றீர்கள்//

அனானி நண்பரே!
நான் போன கதையில் கடமையைத் தவிர்த்து காதலிப்பது தவறு என்ற பாணியில் எழுதிஇருந்தேன். அதைப் போல காதலில் ஜெயித்த பெண் ஒருத்தி வாழ்க்கையில் தோற்றமை பற்றிய கதை இது...
காதலில் வென்று வாழ்க்கையிலும் வென்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். மற்றும் படி நான் ஒரு பழமைவாதியுமல்ல காதலின் எதிரியுமல்ல

said...

//இலங்கை தமிழில் எது கண்டாலும் ஒரு இனம் தெரியாத பாசம்( இனப் பாசம் ) வந்து விடுகிறது.கதை நன்றாக உள்ளது. மச்சாள் என்ற புதிய தமிழ் சொல்லையும் தெரிந்து கொண்டேன். நன்றி.//
நன்றி முரளீதரன் ஐயா அவர்வளே!
உங்களைப் போன்றவர்களின் பாசம்தான் எங்களை வாழவைக்கின்றது. மச்சாள் என்ற சொல்லை நீங்கள் பாவிப்பதில்லையா???

said...

ஆம் மயூரேசன்,
தமிழகத்தில், கணவரின் சகோதரி உறவை கொழுந்தியாள் என்றோ அல்லது நாத்தனார் என்றோதான் குறிப்பிடுகிறார்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

said...

//கணவரின் சகோதரி உறவை கொழுந்தியாள் என்றோ அல்லது நாத்தனார் என்றோதான் குறிப்பிடுகிறார்கள்//

இந்தச் சொல்லை தமிழ் திரைப்படங்களில் கேட்டிருந்தாலும் எங்களுக்கு இது புதுச் சொல்தான்.

said...

மிகவும் அருமை. படிக்கையில் அந்தக் குசினியும் அந்தப் பக்கம் படுத்துகிடக்கும் கிழவியும் கண்முன்னே வந்தார்கள். நல்ல படைப்பு. எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

said...

மயூரேசன்,
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

//மிகவும் அருமை. படிக்கையில் அந்தக் குசினியும் அந்தப் பக்கம் படுத்துகிடக்கும் கிழவியும் கண்முன்னே வந்தார்கள். நல்ல படைப்பு. எனது மனமார்ந்த வாழ்த்துகள்.//

நன்றி இராகவன் அண்ணா உங்களைப் போன்ற பண்பட்ட எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றமை என் பாக்கியமே!!!

said...

//மயூரேசன்,
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

உங்கள் வாழ்த்திற்கும் வரவிற்றும் நன்றி வெற்றி அவர்களே!

said...

Nice story pa..
ennum elluthunga!!

said...

நன்றி ஜீவன் அவர்களே உங்கள் வரவிற்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து இங்கே வாருங்கள்!