சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.
தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.
நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.
" டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?" (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)
" ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்." நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.
என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
" மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே? " நண்பன் வினாத் தொடுத்தான்.
உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.
விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.
வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார்.
" வ்வீவீ.........ல்" தியட்டர் எங்கும் விசில் சத்தம்.
பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது.
அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள்.
அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.
அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.).
போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று.
படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது.
இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர்.
வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.
இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது.
கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.
இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.
பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)
அன்புடன்,
ஜெ.மயூரேசன்.