71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை - Meme)
நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!
இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது.
இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு - கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.
நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம். இது முன்பு இணைந்து இருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.
இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.
நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.
சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.
நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்...!!!!
8 மறுமொழி:
தொடர்வினைக்கு நன்றி மயூ. தனியார் கல்வி இல்லாதது, இசுலாமியர்களை தமிழர் என்று சொல்லாதது பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு புதுத் தகவலாகவே இருக்கும்.
அப்புறம், உலகெங்கும் இருக்க உங்க இலங்கை நண்பர்களை இந்தத் தொடர்வினைக்கு அழைக்கலாமே :)
அப்புறம் அது மீம். மெமெ இல்லை :)
இரு மொழி தேசிய கீதமும் புதுச்செய்தி !
.
அன்பு மயூர்,
இந்த கட்டுரையின் வாயிலாக நிறைய புது விஷயங்களை அறிந்து கொண்டேன். கட்டுரையை எழுதிய பின்புலத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் - உங்கள் வட்டத்திற்கு நான் புதியவன் ஆனதால் அது சரிவர புரியவில்லை.
இலங்கை பற்றி எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. உங்களின் அழகிய தமிழ், கள்ளம் கபடமற்று பழகும் தன்மை என அனைத்துமே எனக்குப் பிடிக்கும்.
என் சிறு வயதில் [பயிற்சி எடுத்துவந்த] சில இலங்கைப் போராளிகளை எங்கள் ஊரிலேயே சந்தித்துள்ளேன். மிகவும் அன்பாகப் பழகுவார்கள்.
வாழ்க்கையில் ஒருமுறையாவது இலங்கைக்கு வரவேண்டும் என்ற ஆசை (சிங்கப்பூர் செல்லும் வழியில் இலங்கை ஏர்போர்ட் வரைக்கும் வந்ததோடு சரி) இந்த கட்டுரையைப் படித்த பிறகு வழுப்பட்டுள்ளது.
//அப்புறம், உலகெங்கும் இருக்க உங்க இலங்கை நண்பர்களை இந்தத் தொடர்வினைக்கு அழைக்கலாமே :)//
ஆமா முயற்சிக்கின்றேன்!!!
//அப்புறம் அது மீம். மெமெ இல்லை :)//
ஹி..ஹி..
தப்பா நினைக்காதீங்க.. ஆங்கிலம் அவ்வளவா ஓடாது!!!
//இரு மொழி தேசிய கீதமும் புதுச்செய்தி ! //
எனக்குக் கூட பல சமயம் ஆச்சரியமாக இருந்திருக்கின்றது!!!
அன்புள்ள God நிச்சயம் ஒரு நாள் நீங்கள் இலங்கை வரவேண்டும். உங்களை நாங்கள் கைகுலுக்கி வரவேற்க வேண்டும். அதற்கு நாட்டு நிலைமைகள் மாற வேண்டும்!!!
அனைத்தும் விரைவில் நடக்க இறைவனை பிரார்த்திப்போம்!!!
நன்றி God
/* நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.*/
கனடாவில் இரு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பார்கள்[ஆங்கிலம், பிரெஞ்சு]. தற்போது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞரான கந்தவனம் அவர்கள் கனேடிய தேசிய கீதத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில தமிழ்ச் சமூக நிகழ்வுகளில் தேசிய கீதம் ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் பாடுவார்கள்.
/* அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும் */
இது புதுச் செய்தி எனக்கு. நான் ஈழத்தில் வசித்த காலங்களில் சென்ற எந்த ஒரு நிகழ்விலும் இலங்கைத் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. உண்மையில் எனக்கு இதுவரை இலங்கைத் தேசிய கீதம் என்னவென்றே தெரியாது. எனக்குப் பள்ளிகளிலும் சொல்லித் தந்ததாகவும் ஞாபகம் இல்லை.
நான் படித்த தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு என்று கல்லூரி கீதம் உண்டு. கல்லூரியின் ஒவ்வொரு நிகழ்விலும்/கூட்டத்திலும் கல்லூரி கீதம்தான் இசைக்கப்படும். தேசிய கீதம் அல்ல.
//கனடாவில் இரு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பார்கள்[ஆங்கிலம், பிரெஞ்சு]. தற்போது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞரான கந்தவனம் அவர்கள் கனேடிய தேசிய கீதத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில தமிழ்ச் சமூக நிகழ்வுகளில் தேசிய கீதம் ஆங்கிலம், தமிழ் மொழிகளிலும் பாடுவார்கள்.//
ம்..இது எனக்குப் புதுச் செய்தி!!!
//உண்மையில் எனக்கு இதுவரை இலங்கைத் தேசிய கீதம் என்னவென்றே தெரியாது. எனக்குப் பள்ளிகளிலும் சொல்லித் தந்ததாகவும் ஞாபகம் இல்லை.//
எனக்கும் பள்ளியீல் சொல்லித்தரவில்லை.. சில அரச வைபவங்களில் தமிழில் பாடப்படுவதைக் கேட்டிருக்கின்றேன்!!! அவ்வளவுதான்!!!
இலங்கை வாழ் தமிழ் மொழிப்பேசும் இசுலாம் மதத்தினர் தம்மை தமிழர்கள் என்று சொல்லி நான் என்றுமே பார்த்ததில்லை. தமிழை பேசுவார்கள். தமிழ் மொழியூடாகவே தமது கல்வியினையும் தொடர்வார்கள். ஆனால் தமிழர்கள் என்று சொல்வதையும் விரும்பாதவர்களாகவும், தமிழ் சார் எந்த கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளாதவர்களாகவுமே இருப்பது எனக்கும் பல கேள்விகளை அப்பப்போது எழுப்பியுள்ளன.
ஆனால் நான் தற்போது இருக்கும் நாடான கொங்கொங்கில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், சிறுவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கும் இந்து, இசுலாம் என்ற பேதங்களின்றி தமிழர்கள் என ஒரே இனமாக தம்மை அடையாளப்படுத்து தமிழ் வளர்ப்பது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.
இசுலாமியர்களும் "திருக்குறல்" படிப்பதும் "தைப்பொங்கல்" கொண்டாடுவதும் தமிழர்கள் எனும் ஓர் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கொங்கொங் நாட்டின் தமிழ் பண்பாட்டு கழகத் தலைவரும் ஒரு இசுலாமியரே.
இந்த வலைப்பதிவில் பார்க்கவும்
hongkongeelavan.blogspot.com
Post a Comment