Showing posts with label கணனிக் கட்டுரை. Show all posts
Showing posts with label கணனிக் கட்டுரை. Show all posts

2 April 2007

68 : என்னருமைக் காதலி கணனி

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் ... விஷ... என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்....!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்.....)

21 January 2007

57 : JavaScript - Java வேறுபாடு என்ன?

சில காலங்களுக்கு முன்பு நெட்ஸ்கேப் நவிகேட்டர் நிறுவனத்தில் தனியே எச்.டி.எம்.எல் மாத்திரம் பயன்படுத்தி வினைத்திறனான, பயனருடன் தொடர்பாடக்கூடிய இணையப் பக்கங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். இதை நீக்க 1995 ல் லைவ் ஸ்கிரிப்ட் (Live Script) என்ற மொழியை உருவாக்கினர். இதன் மூலம் இணையத்தள வடிவமைப்பாளர்கள் இணையப் பக்கத்தில் தமது ஆதி்க்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைப் பார்த்த மைக்ராசாப்ட் அண்ணா சும்மா இருப்பாரா அவர் பங்கிற்கு ஜெஸ்கிரிப்ட் (JScript) என்ற மொழியை உருவாக்கினார். இந்த ஜெஸ்கிரிப்ட் ஜாவா ஸ்கிரிப்ட்டின் மறு வடிவமாகவே இருந்தது பின்னர், இதன் 2.0 பதிப்பும் வெளிவந்தது, இது பொதுவாக சேர்வர் சைட் சார்ந்து இயங்குவதாகவே உள்ளது (turning JScript into a server-side scripting language that, when embedded inside ASP pages, could access server-side databases and create HTML pages with dynamic content). இதே வேளை ஜெஸ்கிரிப்ட் போலவே வி.பி.ஸ்கிரிப்ட் என்ற மொழியையும் மைக்ரோஃசாப்ட் வெளியிட்டம இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே விபி ஸ்கிரிப்ட் வேலை செய்யும் என்பதால் ஜெ ஸ்கிரிப்ட், ஜாவா ஸ்கிரிப்ட் அளவு பிரபல்யம் அடையவில்லை.

ஜெஸ்கிரிப்டின் பதிப்புகள் பல தற்போது வெளிவந்துவிட்டன. விசுவல் ஸ்டூடியோவில் (Visual Studio) ஒரு பகுதியாக தற்போது ஜெஸ்கிரிப்ட் வெளியிடப்பட்டு பிரபலம் பெற்றுள்ளது.

இந்த இரு ஸ்கிரிப்ட் மொழிகளால் மைக்ரோசாப்டும் நெட்ஸ்கேப் நவிகேட்டரும் தமக்கிடையில் போட்டி போட்டு தரநிர்ணயத்தில் கோட்டை விட்டனர். ஆயினும் தற்போது European Computer Manufacturing Association (ECMA) சில நடவடிக்கை மூலம் தரநிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியே போனால் ஜாவா ஸ்கிரிப்டும் ஜே-ஸ்கிரிப்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளது.

விடயம் அறிந்த மென்பொருள் வல்லுனர்களே, இணைய வடிவமைப்பாளர்களே ஏனைய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தனையும் ஆர்வக்கோளாரில் நான் வாசித்து அறிந்துகொண்டவையே!

Download a Free E-book

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.