Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

9 April 2007

70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்


மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?

The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.

கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.

வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.

ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.

பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.

சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.

மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.
இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).

மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.

கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.

இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.

இப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.

ஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது!!!

கடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.

கிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (Dambledore’s Army) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா!!! இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.

கடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா? எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா? என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.

அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். I just can’t wait till I lay my hands on the next book என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ!!!!

அடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

7 April 2007

69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்




ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.



ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!

23 March 2007

67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை


உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.

அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.

கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.

டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.

சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.

ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்... அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.

கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.


இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.


கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.

இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.

ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.

கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்... என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.

இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.

பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.)