Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

12 March 2007

65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்



போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.

உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.

உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது.

உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!

இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.

அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.

சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
“ யார்?” சரத்

“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.

சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.

உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.

இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.
பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.

30 January 2007

59 : போக்கிரி விமர்சனம்


சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.

 

தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

 

நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.

 

" டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?" (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)

 

" ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்." நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.

 

என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

" மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே? " நண்பன் வினாத் தொடுத்தான்.

 

உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.

 

விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.

 

வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார்.  

" வ்வீவீ.........ல்" தியட்டர் எங்கும் விசில் சத்தம்.

 

பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது.

 

அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள்.

அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.

 

அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.).

 

போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று.

 

படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது.

 

இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

 

பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர்.

 

வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.

 

இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது.

 

கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.

 

இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.

 

பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)

 

அன்புடன்,

ஜெ.மயூரேசன்.

8 January 2007

52 : மண் திரை(ப)ப்படம்


அண்மையில் மண் எனும் ஈழத்தை சித்தரிக்க முயலும் திரைப்படம் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. படம் முடிந்தவுடன் சிந்தித்துப் பார்த்தேன் இது வரை எவ்விடத்தில் ஈழத்தமிழரின் வாழ்வியலை சரியாகச் சித்தரித்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை கூட அவர்கள் ஈழத்தமிழரையும் அவர்களில் வாழ்வியலையும் சரியாகப் படம் பிடித்துக் காட்டவில்லை.

இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டு தோட்டங்களில் கூலிக்கமர்த்தப்பட்ட தமிழர்களை இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள் கேவலமாக நடத்துவதாகப் படம் சித்தரிக்கின்றது.

நான் அறிந்தவரை நான் எண்னிலடங்காத அளவு மலையகத் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றேன். அவர்களுடன் படித்தேன் படிக்கின்றேன் எதிர்காலத்தில் வேலைசெய்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமோ குளப்பமோ இல்லை, பல தசாப்தங்களுக்கு முன்னே இருந்த விடயத்தை இப்போது இருப்பதாகக் காட்டியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தை தாய்நாடாக ஏற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள அவர்களும் இனிமேல் ஈழத்தமிழர்தான்.

திரைப்படத்தின்படி ஈழத்தமிழர்கள் பெரிய தோட்ட முதலாளிமார்களாகவும் மலையகத்தமிழர்கள் ஊரற்ற பிச்சைக்காரர்களாகவும் காட்டியுள்ளனர். நிஜத்தில் ஈழத்தமிழரிலும் ஆயிரத்தெட்டு ஜாதி வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவற்றை இந்தப்படம் பெருமளவில் இருட்டடிப்பு செய்துவிட்டது. அதைவிட மலையகத்தமிழர்கள் கொழும்பிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பிரபல முதலாளிமார்களாக இருக்கின்றனர். கொழும்பில் நான் இருக்கும் பகுதியான கொட்டஹேன பகுதியில் பணம் படைத்த மலையகத் தமிழர்களைக் காணலாம்.

அதைவிட வன்னியில் லண்டனில் இருந்து வந்தவர் ஒரு விருந்துபசாரம் வைப்பார் பாருங்கள், சொல்லி வேலையில்லை. ஆட்டமென்ன கூத்தென்ன பெண்களின் உடையென்ன... இதெல்லாம் என் ஈழம் இல்லை. அது போதாதென்று அங்கு ஒரு போராளியும் வந்து திடீரென்று தலையைக் காட்டிவிட்டு மறைவார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் இப்படியாக தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறந்து கூத்தடிப்பதில்லை.

பலகாலத்திற்கு முன்பு இருந்ததும், ஈழப்போராட்டமெனும் பேரலையில் சிக்கி கலைந்து போய்விட்டதுமான சில கசப்பான நிகழ்வுகளுக்கு புது வடிவம் கொடுக்க முயலும் முட்டாள்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மொத்தத்தில் இந்த மண் திரைப்படம் என் மண்ணில்லை. ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டமும் சோகமும் நிறைந்த வாழ்வையும் யாரும் தயவுசெய்து வியாபாரமாக்க நினைக்காதீர்கள். நாம் ஈழத்தமிழர் அதைவிட வேறெந்த பிரிவும் எம்மிடையே இல்லை.

ஓன்றே எம் இனம்
ஒருவனே எம் தேவன்
ஒன்றே எம் இலக்கு


அன்புடன்,
மயூரேசன்