64 : முதுமையின் உறவு
மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.
வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்?” நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.
“நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான்” சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.
“பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன்” மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
“கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு”
“நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத”
“அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும்” கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது.
“அப்பனே முருகா!” வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.
முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.
மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.
மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.
அன்றிரவு மங்களம் தன் கணவருடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.
“இஞ்சருங்கோ! அம்மாவிண்ட விளையாட்டுத் தெரியுமே?”
“என்னப்பா! சொன்னியள் என்டாத்தானே எனக்குத் தெரியும்.. சும்மா புதிர் போட்டுக்கொண்டு இருக்கிறியளே!”
“அம்மா இவன்... எங்கட குமரனுக்கு வேண்டி வைச்சிருக்கிற சின்னப் பிள்ளைகளின்ட பிஸ்கடை எடுத்துக் கொண்டு போய் பின்னால இருக்கிற கொட்டிலுக்குள்ள வைச்சு சாப்பிடுறா. நான் கண்டும் காணாத மாதிரி விட்டிட்டன். வயது போன காலத்தில அதுகளுக்கு இப்படி சின்னச் சின்ன ஆசைகள் பாருங்கோ” வாய் முழுக்க புன்னகையுடன் கூறினாள் மங்களம்.
“ம்... கொஞ்சக் காலத்தில எங்கட பொடியன் குமரனும் அவனின்ட மனுசியோட எங்களப் பற்றி இப்பிடித்தான் கதைப்பான்” பதில் கூறிய மங்களத்தின் கணவர் சுந்தரேசனும் தன்பாட்டுக்கு தானும் தன் மாமியாரின் விளையாட்டை நினைத்துச் சிரித்தார்.
நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் கையில் ஒரு பையுடன் ஆர்வமாக வீட்டினுள்ளே நுழைந்தார். வந்தார். பின்னர் தன் மகனை நோக்கி.
“டேய் கள்ளப் பொடியா இங்க வாடா உனக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்கிறன்” கீழே குந்தியிருந்து பையைத் திறப்பதற்கு ஆயத்தமாககிக்கொண்டே தன் செல்வப் புதல்வனைக் கூப்பிட்டார். வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறையவும் புன்னகையோடு.
அந்தப் கடதாசிப் பையினுள் கையைவிட்டு அதனுள் இருந்து ஒரு பொருளை எடுத்து வெளியே விட்டார். சின்னஞ்சிறிய வெள்ளைப் பூனைக் குட்டி. கண்கள் துறு துறுவென்று இருந்தது. குமரன் அந்தக் குட்டியை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான்.
“அப்பா என்ன பெயர் வைப்பம்?” குளந்தைக்குரியே அதே பிரைச்சனை.
“ம்.. உனக்கு விருப்பமான பெயரையே வையப்பு”
“அப்ப நான் டைகர் எண்டு பெயர் வைக்கட்டே? டேய் குட்டி டைகர் நீ நல்லா எலி பிடிப்பியாடா?”
“மியாவ்..” ஆமாம் என்பது போல சத்தம் இட்டது பூனைக்குட்டி.
பூனையின் சத்தம் கேட்டதும் கதிரையில் வழமைபோல உறங்கிக்கொண்டு இருந்த கண்ணம்மா படபடப்புடன் விழித்து எழுந்துகொண்டார்.
“உதென்ன கோதாரி விழுந்த சாமான். உதை என்னத்துக்கு வீட்டுக்கு கொண்டு வந்தனியள், பேசாம கொண்டு போய் சந்தையில விட்டிட்டு வாங்கோ” முகம் முழுக்க வெறுப்புடன் கூறினாள் மணியம்மா.
மணியம்மாவின் என்றுமில்லாத கடுகடுப்பினால் முகம் கறுத்துப்போன சுந்தரேசன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.
“ஏன் அம்மம்மா டைகரை பேசிறியள். அவன் நல்ல பொடியன். நீங்க ஒருக்காத் தூக்கிப் பாருங்கோ” பாட்டியை நோக்கிச் சென்றான் குட்டிப்பயல் குமரன்.
“சீ... சீ.. அங்கால கொண்டு போ” எரிந்து விழுந்தாள் மணியம்மா. ஏமாற்றத்துடன் சிறுவனும் அவ்விடத்தில் இருந்த தன் புதிய நண்பனோடு நகர்ந்து விட்டான்.
அன்று இரவு வழமைபோல சுந்தரேசனும் மங்களமும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
“ஏன் இந்த மனுசி வர வர இப்பிடி மாறுதோ தெரியேல!!!” சலித்துக்கொண்டாள் மங்களம். என்னதான் தாயானாலும் தன் கணவரை அவர் அவ்வாறு பேசியது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்வில்லை.
“சரி.. பரவாயில்லை விடுங்கோ. வயது போன காலத்தில அவையள் அப்பிடித்தானே” சுந்தரேசன் நிலமையை மேலும் மோசமாக்க முயலாமல் சமாளித்தாள்.
மறுநாள் காலை அவசரம் அவசரமாக கணவரும் மனைவியும் அலுவலகம் வெளிக்கிடும் போது பின் புறம் கொட்டிலினுள் குமரனின் சத்தம் கேட்கவே இருவரும் அங்கே ஓடிச் சென்றனர். அங்கே குமரன் கண்ணில் வெற்றியின் வெளிச்சம்.
“அம்மா டைகர் இண்டைக்கு ஒரு எலியைப் பிடிச்சிட்டுது... கூய்ய்ய்ய்ய்ய்ய்..... டைகர் கொட்டிலுக்க எலியப் பிடச்சிட்டான்” கீச்சிடும் குரலில் சத்தம் இட்டுக்கொண்டு கொட்டிலைச் சுத்தி சுத்தி ஓடத் தொடங்கினான்.
இதனிடையே சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்த மணியம்மா காதிலும் குமரனின் வெற்றிக் களியாட்டத்தின் சத்தம் கேட்கவே மேலும் வேகமாக ஓடி வந்தார். வந்தவர் வாசல படிக்கட்டில் தடக்குப் பட்டு தலையடிபட கீழே விழுந்தார்.
“ஐயோ!!!!!” ஒரு பெரிய சத்தம் .
இப்போ குமரனை சுற்றி நின்ற சுந்தரேசனும், மங்களமும் வாசல் படியை நோக்கி ஓடினர். அவர்கள் போய் சேர்வதற்குள் காரியம் யாவும் நிறைவு பெற்று இருந்தது.
வான வெளியிலே இப்போது மணியம்மா பறந்துகொண்டு இருந்தார். அவர் கணவரைக் காணப் போகும் மகிழ்ச்சி அவர் முகம் எங்கும் தெரிந்தது. கொஞ்சம் கீழே குனிந்து அவர் கையைப் பார்த்தால் அவர் பிஸ்கட் இட்டு வளர்த்த அந்த குட்டிச் சுண்டெலி கீச் ... கீச் என்று சத்தம் இட்டுக்கொண்டே அவரிடம் பிஸ்கட் வேண்டி அடம் பிடித்துக்கொண்டு இருந்தது.
தனிமையின் கொடுமையால் வாடும் முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்.