23 March 2007

67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை


உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.

அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.

கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.

டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.

சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.

ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்... அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.

கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.


இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.


கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.

இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.

ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.

கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்... என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.

இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.

பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.)

20 March 2007

66 : நினைவுகள் IV

இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!

என்மனதில் இருந்து பல நினைவுகள் அகன்று விட்டபோதும் சில நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல பசுமையாக உள்ளன. ஏற்கனவே உங்களுடன் என் நினைவுகளை மூன்று தடவை பகிர்ந்தேன். இப்போது நான்காம் தடவையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன் காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் கடும் ஆர்வம். லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று அனைத்து காமிக்சுகளையும் வாசித்து முடித்து விடுவேன். அன்று என் நண்பன் ஒருவன் என்னிடம் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டுத்தருவதாகக் கூறி என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அந்தப் புத்தகத்தை தன் ஆங்கிலப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டான்.

மாலை தனம் டீச்சரிடம் வகுப்பு. அவர்தான் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞாணம் ஆகிய பாடங்களை கற்பிற்பார். இந்தத் தனம் ரீச்சரைப் பற்றி நான் பலதடவை கூறி இருக்கின்றேன். கண்டிப்பு ஒழுக்கம், கலாச்சாரம் என்பவற்றை கண்ணாகக் கண்காணிப்பார். யாராவது பிசகினால் அடித்து நெளிவெடுத்து விடுவார். நண்பன் நான் கொடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அன்று பார்த்து வெளியே எடுக்காமல் அப்படியே கொண்டுவந்து டீச்சருக்குப் பக்கத்தில இருந்திட்டான். அவர் கற்பிற்பதற்காகப் புத்தகம் கேட்டபோது காமிக்ஸ் புத்தகத்துடன் சேர்த்து ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான். பின்பு என்ன மயூரேசன் எழுப்பபட்டு பல கேள்விகள் கேட்கப்பட்டார். அத்துடன் காமிக்ஸ் புத்தகம் அனைத்தும் என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. என்ன செய்ய ஒட்டாண்டியாகி எந்த காமிக்ஸ் புத்தகமும் இல்லாமல் தனிமரமாக்கப்பட்டேன்.

இதே வேளை நான் மாட்டுப் பட்டவுடன் அவர் அதை பெரிதாக எடுக்காத மாதிரிக் காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் உங்களிடம் எத்தனை காமிக்ஸ் புத்தகம் உள்ளது என்று விசாரித்தா. உசாரான மாணவர்கள் தங்களிடம் 20, 30 என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லலாயினர். எல்லாரும் சொல்லி முடிந்ததும்
“சரி இப்ப எல்லாரும் வீட்டுக்குப் போய் உங்கட புத்தகம் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாங்கோ!”

அப்பத்தான் எல்லாரும் ஓடி முழிச்சாங்கள். என்ன முழிச்சு என்ன பிரயோசனம் அதுதானே கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் ஆகிட்டுது.

மாலை நேர டியூசன் வகுப்பில் இப்படி என்றால் ஒரு நாள் பாடசாலையில் பெரும் சங்கடமான காரியம் ஒன்றை நிறை வேற்றினேன்.

வழமைபோல மதிய இடைவேளைக்குப் பிறகு கணக்குப் பாடம் தொடங்க இருந்தது. இன்னமும் ஆசிரியர் வரவில்லை. வழமையாக முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். இன்னமும் வராதது எமக்குச் சந்தோஷமாகவே இருந்தது. நேரம் போக போக சேர் இனிமேல் வரமாட்டார்டா என்று சத்தமாகச் சத்தமிடும் அளவிற்கு சந்தோஷம் புரைகடந்து ஓடிக்கொண்டு இருந்தது.

இந்தவேளையில் எங்கள் வகுப்பு நண்பன் ஒருவன் சத்தம் போடாமல் நழுவிக்கொண்டு வெளியே போவதை இன்னுமொரு நண்பன் கண்டுவிட்டான். போய் மறந்து போய் இருக்கிற ஆசிரியரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயத்தில் அதை எனக்கும் வேறு சொல்லிவிட்டான்.

“டேய் எங்கடா வெளியால போறாய்?” நான் சத்தமிட்டுக் கேட்டேன்.

“வயிறு கொஞ்சம் அப்செட்டடா!.. “ வயிற்றைத் தடவிக்காட்டியவாறே நகர்ந்தான்.

போடா போ... இன்டைக்கு உனக்கு ஆப்பு வைக்கிறன்டா. என் மனம் சொல்லிக் கொண்டது.

இரண்டொரு நிமிடங்களில் நான் பூட்டியிருந்த கழிவறை வாசலில் நின்று நாய் பூனை என்று எனக்குத் தெரிந்த மாதிரி விலங்குகளின் குரலில் எல்லாம் ஒலி எழுப்பினேன். உள்ளே இருந்து சத்தம் வரவேயில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரிக்கவே நான் சில கூளாம் கற்களைப் பொறுக்கி வந்து கதவின் மேல் இடுக்கினாலும் கீழ் இடுக்கினாலும் உள்ளுக்குள் எறிந்துகொண்டே இருந்தேன். இன்னமும் உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை. குறைந்த பட்சம் டேய் யார்டா அந்தக் குரங்கு என்று கூட சத்தம் வரவில்லை.

மிகுந்த ஏமாற்த்துடன் அவ்விடம் விட்டு நகர முட்பட்ட போது எனக்கு இன்னுமொரு எண்ணம் வந்தது. அதாவது மேல் மாடிக்குச் சென்று நண்பன் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது அவனின் மீது கொஞ்சம் நீர் ஊற்றலாம் என்பதுதான் அது.

நினைத்ததைத் செய்து முடிக்கும் நோக்குடன் போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு மாடியில் ஏறி நின்றேன். நேரம் நகர்கின்றது இன்னமும் அவன் வரவில்லை.

திடீர் என்று எனக்குப் பின்பக்கம் இருந்து ஒரு கை என் தோழில் விழவே நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே என் நண்பன்.

“டேய் நீதானே உள்ளுக்க போனாய்?”

“நானா? கழிவறைக்குள்ளையா? போடா விசரா, நான் கன்டீனுக்குப் போய் இரண்டு கட்லட் சாப்பிட்டிட்டு வாறன். உண்மையைச் சொன்னா நீங்களும் இழுபட்டுக்கொண்டு வருவியளே. அதுதான் வயிறு சரியில்லை என்டு சொன்னான்”

“ஆ...சரி.. சரி” சொல்லிக்கொண்டு என் கைதானே போத்தலைக் கீழே நிலத்தில் வைத்தது. இப்போது கீழே எட்டிப் பார்த்த போது கழிவறைக்குள் இருந்து எமது கணக்கு வாத்தியார் வெளியிலே வந்து கொண்டிருந்தார். பாடம் கற்கத் தயாராக நாங்கள் வகுப்பை நோக்கி ஓடினோம். (என்னுடன் இத்தனை காலம் இருந்த இரகசியம் இன்று இணையத்தில் யுனித் தமிழில் அரங்கேறிவிட்டது :))



வீர தீரப் பயணங்கள் தொடரும்......

12 March 2007

65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்



போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.

உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.

உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது.

உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!

இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.

அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.

சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
“ யார்?” சரத்

“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.

சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.

உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.

இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.
பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.

5 March 2007

64 : முதுமையின் உறவு

மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.

வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்?” நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.

“நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான்” சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.

“பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன்” மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

“கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு”

“நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத”

“அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும்” கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது.

“அப்பனே முருகா!” வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.

முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.

மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.

மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அன்றிரவு மங்களம் தன் கணவருடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.
“இஞ்சருங்கோ! அம்மாவிண்ட விளையாட்டுத் தெரியுமே?”

“என்னப்பா! சொன்னியள் என்டாத்தானே எனக்குத் தெரியும்.. சும்மா புதிர் போட்டுக்கொண்டு இருக்கிறியளே!”

“அம்மா இவன்... எங்கட குமரனுக்கு வேண்டி வைச்சிருக்கிற சின்னப் பிள்ளைகளின்ட பிஸ்கடை எடுத்துக் கொண்டு போய் பின்னால இருக்கிற கொட்டிலுக்குள்ள வைச்சு சாப்பிடுறா. நான் கண்டும் காணாத மாதிரி விட்டிட்டன். வயது போன காலத்தில அதுகளுக்கு இப்படி சின்னச் சின்ன ஆசைகள் பாருங்கோ” வாய் முழுக்க புன்னகையுடன் கூறினாள் மங்களம்.

“ம்... கொஞ்சக் காலத்தில எங்கட பொடியன் குமரனும் அவனின்ட மனுசியோட எங்களப் பற்றி இப்பிடித்தான் கதைப்பான்” பதில் கூறிய மங்களத்தின் கணவர் சுந்தரேசனும் தன்பாட்டுக்கு தானும் தன் மாமியாரின் விளையாட்டை நினைத்துச் சிரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் கையில் ஒரு பையுடன் ஆர்வமாக வீட்டினுள்ளே நுழைந்தார். வந்தார். பின்னர் தன் மகனை நோக்கி.

“டேய் கள்ளப் பொடியா இங்க வாடா உனக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்கிறன்” கீழே குந்தியிருந்து பையைத் திறப்பதற்கு ஆயத்தமாககிக்கொண்டே தன் செல்வப் புதல்வனைக் கூப்பிட்டார். வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறையவும் புன்னகையோடு.

அந்தப் கடதாசிப் பையினுள் கையைவிட்டு அதனுள் இருந்து ஒரு பொருளை எடுத்து வெளியே விட்டார். சின்னஞ்சிறிய வெள்ளைப் பூனைக் குட்டி. கண்கள் துறு துறுவென்று இருந்தது. குமரன் அந்தக் குட்டியை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான்.

“அப்பா என்ன பெயர் வைப்பம்?” குளந்தைக்குரியே அதே பிரைச்சனை.

“ம்.. உனக்கு விருப்பமான பெயரையே வையப்பு”

“அப்ப நான் டைகர் எண்டு பெயர் வைக்கட்டே? டேய் குட்டி டைகர் நீ நல்லா எலி பிடிப்பியாடா?”

“மியாவ்..” ஆமாம் என்பது போல சத்தம் இட்டது பூனைக்குட்டி.

பூனையின் சத்தம் கேட்டதும் கதிரையில் வழமைபோல உறங்கிக்கொண்டு இருந்த கண்ணம்மா படபடப்புடன் விழித்து எழுந்துகொண்டார்.

“உதென்ன கோதாரி விழுந்த சாமான். உதை என்னத்துக்கு வீட்டுக்கு கொண்டு வந்தனியள், பேசாம கொண்டு போய் சந்தையில விட்டிட்டு வாங்கோ” முகம் முழுக்க வெறுப்புடன் கூறினாள் மணியம்மா.

மணியம்மாவின் என்றுமில்லாத கடுகடுப்பினால் முகம் கறுத்துப்போன சுந்தரேசன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.

“ஏன் அம்மம்மா டைகரை பேசிறியள். அவன் நல்ல பொடியன். நீங்க ஒருக்காத் தூக்கிப் பாருங்கோ” பாட்டியை நோக்கிச் சென்றான் குட்டிப்பயல் குமரன்.

“சீ... சீ.. அங்கால கொண்டு போ” எரிந்து விழுந்தாள் மணியம்மா. ஏமாற்றத்துடன் சிறுவனும் அவ்விடத்தில் இருந்த தன் புதிய நண்பனோடு நகர்ந்து விட்டான்.

அன்று இரவு வழமைபோல சுந்தரேசனும் மங்களமும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
“ஏன் இந்த மனுசி வர வர இப்பிடி மாறுதோ தெரியேல!!!” சலித்துக்கொண்டாள் மங்களம். என்னதான் தாயானாலும் தன் கணவரை அவர் அவ்வாறு பேசியது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்வில்லை.

“சரி.. பரவாயில்லை விடுங்கோ. வயது போன காலத்தில அவையள் அப்பிடித்தானே” சுந்தரேசன் நிலமையை மேலும் மோசமாக்க முயலாமல் சமாளித்தாள்.

மறுநாள் காலை அவசரம் அவசரமாக கணவரும் மனைவியும் அலுவலகம் வெளிக்கிடும் போது பின் புறம் கொட்டிலினுள் குமரனின் சத்தம் கேட்கவே இருவரும் அங்கே ஓடிச் சென்றனர். அங்கே குமரன் கண்ணில் வெற்றியின் வெளிச்சம்.

“அம்மா டைகர் இண்டைக்கு ஒரு எலியைப் பிடிச்சிட்டுது... கூய்ய்ய்ய்ய்ய்ய்..... டைகர் கொட்டிலுக்க எலியப் பிடச்சிட்டான்” கீச்சிடும் குரலில் சத்தம் இட்டுக்கொண்டு கொட்டிலைச் சுத்தி சுத்தி ஓடத் தொடங்கினான்.

இதனிடையே சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்த மணியம்மா காதிலும் குமரனின் வெற்றிக் களியாட்டத்தின் சத்தம் கேட்கவே மேலும் வேகமாக ஓடி வந்தார். வந்தவர் வாசல படிக்கட்டில் தடக்குப் பட்டு தலையடிபட கீழே விழுந்தார்.

“ஐயோ!!!!!” ஒரு பெரிய சத்தம் .

இப்போ குமரனை சுற்றி நின்ற சுந்தரேசனும், மங்களமும் வாசல் படியை நோக்கி ஓடினர். அவர்கள் போய் சேர்வதற்குள் காரியம் யாவும் நிறைவு பெற்று இருந்தது.

வான வெளியிலே இப்போது மணியம்மா பறந்துகொண்டு இருந்தார். அவர் கணவரைக் காணப் போகும் மகிழ்ச்சி அவர் முகம் எங்கும் தெரிந்தது. கொஞ்சம் கீழே குனிந்து அவர் கையைப் பார்த்தால் அவர் பிஸ்கட் இட்டு வளர்த்த அந்த குட்டிச் சுண்டெலி கீச் ... கீச் என்று சத்தம் இட்டுக்கொண்டே அவரிடம் பிஸ்கட் வேண்டி அடம் பிடித்துக்கொண்டு இருந்தது.



தனிமையின் கொடுமையால் வாடும் முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்.