63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)
இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும்.
என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.
அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.
அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.
காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.
போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.
நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.
சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?
இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........
மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்
“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்
“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.
சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு
“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.
வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.
பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.
“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்
“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.
இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது
“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்
“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.
“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”
“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.
“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”
“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”
“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”
“இல்ல மச்சான்........”
“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”
“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”
“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”
குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.
“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”
“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.
“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”
“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.
“ஓம்!”
“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.
பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.
“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.
கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.
தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.
“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.
இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.
மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!
உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.
“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”
“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.
சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.
கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.
“ஐம் சாரி இனோக்கா”
“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.
“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.
பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.
யாவும் கற்பனை