30 January 2007

59 : போக்கிரி விமர்சனம்


சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.

 

தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

 

நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.

 

" டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?" (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)

 

" ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்." நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.

 

என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

" மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே? " நண்பன் வினாத் தொடுத்தான்.

 

உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.

 

விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.

 

வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார்.  

" வ்வீவீ.........ல்" தியட்டர் எங்கும் விசில் சத்தம்.

 

பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது.

 

அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள்.

அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.

 

அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.).

 

போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று.

 

படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது.

 

இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

 

பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர்.

 

வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.

 

இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது.

 

கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.

 

இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.

 

பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)

 

அன்புடன்,

ஜெ.மயூரேசன்.

23 January 2007

58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்

சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு
உன் மனக் கோடு புரியவில்லையே!
சீ நான் ஒரு முட்டாள்
SQL Query எழுதிய மரமண்டைக்கு
வெறும் காதல் தியறி விளங்கவில்லையே!
UML கீறிய நேரத்தில்
உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!
மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்
ஏன் தெரியுமோ?
உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!
உன் மனமோ Wikipedia
அதில் எழுத ஓடோடி வந்தேன்
யாரவன் மாற்றினான் அதை Encarta வாக
அழிந்து போக அந்த பில்கேட்சு
நீ என்னை வெறுக்கின்றாயா?
பரவாயில்லை
உன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்
Love Bug ஆகவாவது வருவேன்!
அது வரை Trojan Horse ஆக
உன்னைக் கண்காணிப்பேன்!
எது இருந்தென்ன!
உன் Data Base ல்
நான் இல்லையே....
ம்... உன் Hard disk ல் இடமில்லாவிட்டால்
RAM ல் ஒரு தடவை இடம் தரமாட்டாயா?

21 January 2007

57 : JavaScript - Java வேறுபாடு என்ன?

சில காலங்களுக்கு முன்பு நெட்ஸ்கேப் நவிகேட்டர் நிறுவனத்தில் தனியே எச்.டி.எம்.எல் மாத்திரம் பயன்படுத்தி வினைத்திறனான, பயனருடன் தொடர்பாடக்கூடிய இணையப் பக்கங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். இதை நீக்க 1995 ல் லைவ் ஸ்கிரிப்ட் (Live Script) என்ற மொழியை உருவாக்கினர். இதன் மூலம் இணையத்தள வடிவமைப்பாளர்கள் இணையப் பக்கத்தில் தமது ஆதி்க்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைப் பார்த்த மைக்ராசாப்ட் அண்ணா சும்மா இருப்பாரா அவர் பங்கிற்கு ஜெஸ்கிரிப்ட் (JScript) என்ற மொழியை உருவாக்கினார். இந்த ஜெஸ்கிரிப்ட் ஜாவா ஸ்கிரிப்ட்டின் மறு வடிவமாகவே இருந்தது பின்னர், இதன் 2.0 பதிப்பும் வெளிவந்தது, இது பொதுவாக சேர்வர் சைட் சார்ந்து இயங்குவதாகவே உள்ளது (turning JScript into a server-side scripting language that, when embedded inside ASP pages, could access server-side databases and create HTML pages with dynamic content). இதே வேளை ஜெஸ்கிரிப்ட் போலவே வி.பி.ஸ்கிரிப்ட் என்ற மொழியையும் மைக்ரோஃசாப்ட் வெளியிட்டம இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே விபி ஸ்கிரிப்ட் வேலை செய்யும் என்பதால் ஜெ ஸ்கிரிப்ட், ஜாவா ஸ்கிரிப்ட் அளவு பிரபல்யம் அடையவில்லை.

ஜெஸ்கிரிப்டின் பதிப்புகள் பல தற்போது வெளிவந்துவிட்டன. விசுவல் ஸ்டூடியோவில் (Visual Studio) ஒரு பகுதியாக தற்போது ஜெஸ்கிரிப்ட் வெளியிடப்பட்டு பிரபலம் பெற்றுள்ளது.

இந்த இரு ஸ்கிரிப்ட் மொழிகளால் மைக்ரோசாப்டும் நெட்ஸ்கேப் நவிகேட்டரும் தமக்கிடையில் போட்டி போட்டு தரநிர்ணயத்தில் கோட்டை விட்டனர். ஆயினும் தற்போது European Computer Manufacturing Association (ECMA) சில நடவடிக்கை மூலம் தரநிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியே போனால் ஜாவா ஸ்கிரிப்டும் ஜே-ஸ்கிரிப்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளது.

விடயம் அறிந்த மென்பொருள் வல்லுனர்களே, இணைய வடிவமைப்பாளர்களே ஏனைய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தனையும் ஆர்வக்கோளாரில் நான் வாசித்து அறிந்துகொண்டவையே!

Download a Free E-book

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

15 January 2007

56 : தைப்பொங்கல்



அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்,
ஜெ.மயூரேசன்

13 January 2007

55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்

எனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.

இன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.

முன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.

நான் என் பாக்கப் கொப்பி டெம்பிளேடைப் போட்டு தமிழ் மணத்தில் ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன் அது பிரைச்சினை இல்லாமல் ஏறியது அத்துடன் பின்னூட்டமும் சேகரிக்கப்பட்டது.

பின்னர் புதிய டெம்பிளேட்டைப் போட்டு தமிழ் மணத்தில் கூறியவாறு புதிய கருவிப்பலகையையும் சேர்த்தேன் பிரைச்சினை இல்லாமல் சேர்ந்து கொண்டது. அப்புறம் புதிய டெம்பிளேட் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க மீண்டும் தமிழ் மணத்திற்கு ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன். ஆகா என்ன ஒரு சந்தோஷ நிகழ்வு மீண்டும் தமிழ்மணம் பிரைச்சனை இல்லாமல் பதிவை ஏற்றுக்கொண்டது.

புதிய பிளாக்கரில் டெம்பிளேட்டை எடிட் செய்வது முன்பு போல கஷ்டமல்ல! எமக்குத் தேவையான பெட்டிகளை மிக இலகுவாகப் போட்டுக்கொள்ளலாம்!

இப்பத்தானே ஆரம்பம் போகப் போக என் சுகானுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

நன்றி

அன்புடன்,
ஜெ.மயூரேசன்

54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்



புதிய பிளாக்கர் அட்டைப்பலகையை மாற்றிவிட்டேன். தமிழ் மணம் ஏற்றுக்கொள்கின்றதா என இந்தப் பதிவின் மூலம் பரீட்சிக்கின்றேன்...

தமிழ் மண வாசிகள் பின்னூட்டமிட்டு அண்மையில் பின்னூட்டப்பட்டவை பகுதியில் தெரிகின்றதா எனப் பார்க்க உதவிபுரியவும்.

அன்புடன்,
மயூரேசன்

53 : புதிய பிளாக்கர்

புதிய பிளாக்கருக்கு மாறியதைத் தொடர்ந்து அதைத் சோதிக்கவே இந்தப் பதிவு பதிக்கப்படுகின்றது!!

8 January 2007

52 : மண் திரை(ப)ப்படம்


அண்மையில் மண் எனும் ஈழத்தை சித்தரிக்க முயலும் திரைப்படம் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. படம் முடிந்தவுடன் சிந்தித்துப் பார்த்தேன் இது வரை எவ்விடத்தில் ஈழத்தமிழரின் வாழ்வியலை சரியாகச் சித்தரித்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை கூட அவர்கள் ஈழத்தமிழரையும் அவர்களில் வாழ்வியலையும் சரியாகப் படம் பிடித்துக் காட்டவில்லை.

இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டு தோட்டங்களில் கூலிக்கமர்த்தப்பட்ட தமிழர்களை இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள் கேவலமாக நடத்துவதாகப் படம் சித்தரிக்கின்றது.

நான் அறிந்தவரை நான் எண்னிலடங்காத அளவு மலையகத் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றேன். அவர்களுடன் படித்தேன் படிக்கின்றேன் எதிர்காலத்தில் வேலைசெய்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமோ குளப்பமோ இல்லை, பல தசாப்தங்களுக்கு முன்னே இருந்த விடயத்தை இப்போது இருப்பதாகக் காட்டியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தை தாய்நாடாக ஏற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள அவர்களும் இனிமேல் ஈழத்தமிழர்தான்.

திரைப்படத்தின்படி ஈழத்தமிழர்கள் பெரிய தோட்ட முதலாளிமார்களாகவும் மலையகத்தமிழர்கள் ஊரற்ற பிச்சைக்காரர்களாகவும் காட்டியுள்ளனர். நிஜத்தில் ஈழத்தமிழரிலும் ஆயிரத்தெட்டு ஜாதி வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவற்றை இந்தப்படம் பெருமளவில் இருட்டடிப்பு செய்துவிட்டது. அதைவிட மலையகத்தமிழர்கள் கொழும்பிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பிரபல முதலாளிமார்களாக இருக்கின்றனர். கொழும்பில் நான் இருக்கும் பகுதியான கொட்டஹேன பகுதியில் பணம் படைத்த மலையகத் தமிழர்களைக் காணலாம்.

அதைவிட வன்னியில் லண்டனில் இருந்து வந்தவர் ஒரு விருந்துபசாரம் வைப்பார் பாருங்கள், சொல்லி வேலையில்லை. ஆட்டமென்ன கூத்தென்ன பெண்களின் உடையென்ன... இதெல்லாம் என் ஈழம் இல்லை. அது போதாதென்று அங்கு ஒரு போராளியும் வந்து திடீரென்று தலையைக் காட்டிவிட்டு மறைவார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் இப்படியாக தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறந்து கூத்தடிப்பதில்லை.

பலகாலத்திற்கு முன்பு இருந்ததும், ஈழப்போராட்டமெனும் பேரலையில் சிக்கி கலைந்து போய்விட்டதுமான சில கசப்பான நிகழ்வுகளுக்கு புது வடிவம் கொடுக்க முயலும் முட்டாள்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மொத்தத்தில் இந்த மண் திரைப்படம் என் மண்ணில்லை. ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டமும் சோகமும் நிறைந்த வாழ்வையும் யாரும் தயவுசெய்து வியாபாரமாக்க நினைக்காதீர்கள். நாம் ஈழத்தமிழர் அதைவிட வேறெந்த பிரிவும் எம்மிடையே இல்லை.

ஓன்றே எம் இனம்
ஒருவனே எம் தேவன்
ஒன்றே எம் இலக்கு


அன்புடன்,
மயூரேசன்